மழை வெள்ளத்தில் சேதம் அடைந்த தடுப்பணை சீரமைக்கப்படுமா?
வாசுதேவநல்லூர் அருகே மழை வெள்ளத்தில் சேதம் அடைந்த தடுப்பணை சீரமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
வாசுதேவநல்லூர்:
தொடர்மழை காரணமாக, வாசுதேவநல்லூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளம் நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்த குளத்தின் தண்ணீர் மறுகால் பாய்ந்து செல்லும் நிட்சேபநதி என்ற கருப்பையாற்றில் கடந்த மாதம் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால் அங்குள்ள 4 தடுப்பணைகளின் பக்கவாட்டில் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்தன.
இந்த தடுப்பணைகளின் வழியாக விவசாயிகள் நிட்சேபநதியை கடந்து தங்களது விளைநிலங்களுக்கு சென்று வந்தனர். தற்போது சேதமடைந்த தடுப்பணைகளால் விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
சுப்பிரமணியபுரம் பெரியகுளத்தின் மறுகால் பாய்ந்து செல்லும் நிட்சேபநதியில் உள்ள தடுப்பணைகள் வெள்ளத்தால் அரித்து செல்லப்பட்டு சேதமடைந்தன. இதனால் பொட்டைகுளம், கூனிகரை, ராஜகோபாலப்பேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு விவசாயிகள் இடுபொருட்கள், உரங்கள் போன்றவற்றை எடுத்து செல்வதற்கு சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது.
எனவே நிட்சேபநதியில் வெள்ளத்தில் சேதமடைந்த தடுப்பணைகளை உடனே சீரமைக்க வேண்டும். மழைக்காலத்திலும் நிட்சேபநதியை கடந்து செல்லும் வகையில், நவாச்சோலை பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story