தென்காசியில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
தென்காசி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க திட்டமிட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக நடப்பு மக்களவை கூட்டத்தொடரில் 2 பொதுத்துறை வங்கிகளும், ஒரு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தையும் தனியார் மயமாக்க மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதனை கண்டித்தும், வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்தும் வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து மத்திய அரசு, வங்கிகள் சங்கத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இந்த நிலையில் நேற்று நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். இதையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 400 வங்கி கிளைகளை சேர்ந்த 3 ஆயிரத்து 500 ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், தென்காசி அம்மன் சன்னதி பஜாரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆதி கணேசன், பிரான்சிஸ், பாலசுப்பிரமணியன், சங்கர், ஜெயமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அயூப்கான், மாவட்ட செயலாளர் வேல்முருகன், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு செயலாளர் மாரியப்பன், மாதர் சங்க மாவட்ட தலைவி சங்கரி மற்றும் பலர் பேசினார்கள்.
Related Tags :
Next Story