தமிழக அரசு பெண்கள் மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சு
தமிழக அரசு பெண்கள் மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சு
தர்மபுரி:
தமிழக அரசு பெண்கள் மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது என்று தர்மபுரியில் நடந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார்.
குறைதீர்க்கும் சிறப்பு முகாம்கள்
தர்மபுரி மாவட்டத்தில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்கள் தர்மபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் 4 இடங்களில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் திவ்யதர்சினி வரவேற்றார். எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இந்த முகாம்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இந்த முகாம்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:-
சட்டமன்ற தேர்தலுக்கு முன் தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களில் பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பா.ம.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வேளாண்மைக்கு நிழல் பட்ஜெட் வெளியிடப்படுவது வழக்கம். விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் முதல்முறையாக விவசாயத்திற்கு தனி பட்ஜெட்டை அளித்தவர் முதல்-அமைச்சர். அதன் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சிறப்பு கவனம்
தர்மபுரி மாவட்டம் பின் தங்கிய பகுதி. விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட இந்த பகுதியில் நீராதாரம் தொடர்பான விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தர்மபுரியில் ஓடும் சனத்குமார் நதி கால்வாய் சாக்கடையாக மாறிவிட்டது. இதை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்.
தமிழக அரசு பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்களை செயல்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் செய்யும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
மிகப்பெரிய வெற்றி
தர்மபுரி மாவட்டத்தில் 2 நாட்களில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம்களில் பெறப்பட்ட 19,877 கோரிக்கை மனுக்களில் தகுதியுள்ள அனைத்து மனுக்களுக்கும் உரிய தீர்வு காணப்படும். விரைவில் தர்மபுரி மாவட்டத்திற்கு வரும் முதல்-அமைச்சர் தீர்வுக்கான நலத்திட்ட உதவிகளை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு நேரடியாக வழங்குவார். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த முகாம்களில் கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், உதவி கலெக்டர் சித்ரா விஜயன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்பிரமணி, பி.என்.பி. இன்பசேகரன், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், கலால் உதவி ஆணையர் தணிகாச்சலம், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சாந்தி, நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story