குடியாத்தம் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த வாலிபர் கைது
குடியாத்தம் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த, சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குடியாத்தம்
குடியாத்தம் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த, சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஏ.ஜி.பாபு, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நிர்மலா, சப்-இன்ஸ்பெக்டர்கள் குமரன், சரவணன், சக்கரவர்த்தி, திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு ஏட்டு ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் நேற்று காலையில் குடியாத்தம் அடுத்த பரவக்கல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வீட்டில் 4 சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டுகள் மேலும் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் இருந்தன. அந்த நாட்டு வெடிகுண்டுகளையும், மூலப் பொருட்களையும் போலீசார் கைப்பற்றி, அங்கிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது வனவிலங்குகளை வேட்டையாட அவர் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தது தெரியவந்தது.
வாலிபர் கைது
மேலும் அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வீ.கோட்டாவை அடுத்த ஏழுசுத்தி கோட்டை பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் மகன் நடராஜன் (வயது 35) என்பதும், குடியாத்தம் பரவக்கல் அருகே கிடங்குராமாபுரத்தில் அவருடைய மாமியார் வீடு உள்ளதும் தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் வீடு எடுத்து தங்கி நடராஜன் கூலிவேலை செய்வதுடன், விவசாய நிலங்களில் காவல் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து குடியாத்தம் தாலுகா போலீசார் நடராஜனை கைது செய்தனர்.
இவர் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து வேறு யாருக்காவது விற்றாரா?, நாட்டு வெடிகுண்டுகளை தயாரிக்க மூலப் பொருட்கள் எங்கிருந்து வாங்கினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story