கம்பம்மெட்டு சோதனை சாவடியில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது
கம்பம்மெட்டு சோதனை சாவடியில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு அந்த வழியாக வரும் கேரள மாநில வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
கம்பம்:
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லையில் உள்ள போடிமெட்டு, குமுளி, கம்பம்மெட்டு சோதனை சாவடிகளில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் அமைத்து கண்காணிக்குமாறு தேனி மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர் சுப்பையா பாண்டியன் உத்தவிட்டுள்ளார். அதன்படி கம்பம்மெட்டு சோதனை சாவடியில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் க.புதுப்பட்டி கால்நடை மருந்தக டாக்டர் காமேஷ் கண்ணன் தலைமையில் கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து வாத்து உள்ளிட்ட பறவைகள் கொண்டு வரும் சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு அவை தமிழகத்துக்குள் வராமல் திருப்பி அனுப்பப்படுகின்றன. மேலும் கேரளாவில் இருந்து காலியாக வரும் வாகனங்கள் முழுவதும் ஸ்பிரேயர் மூலம் கிருமிநாசினி தெளித்த பிறகுதான் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.
இந்தநிலையில், தமிழகத்தில் இருந்து கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக கேரளாவிற்கு பிராய்லர் கோழி, முட்டை மற்றும் கால்நடைகளை கொண்டு செல்லும் வாகனங்கள் தடையில்லாமல் சென்று வருகின்றன.
இதுபற்றி கால்நடை டாக்டர் காமேஷ் கூறும்போது, தமிழகத்தில் பறவை காய்ச்சல் இல்லாததால் பிராய்லர் கோழி மற்றும் முட்டைகள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு பறவைகளை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் வர முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.
Related Tags :
Next Story