குரும்பூர் அங்கமங்கலம் கூட்டுறவு சங்க துணை செயலாளரை பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி
குரும்பூர் அங்கமங்கலம் கூட்டுறவு வங்கியில் நடந்த நகை, பணம் மோசடி விசாரணைக்கு வந்த துணை செயலாளரை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு நிலவியது
தென்திருப்பேரை:
குரும்பூர் அங்கமங்கலம் கூட்டுறவு வங்கியில் நடந்த நகை, பணம் மோசடி விசாரணைக்கு வந்த துணை செயலாளரை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு நிலவியது.
நகை, பணம் மோசடி
குரும்பூர் அங்கமங்கலத்தில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கியில் கடந்த செப்டம்பர் மாதம் அடமானம் வைத்த நகை மற்றும் பணம் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து அந்த வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் வங்கி தலைவர் முருகேசபாண்டியன் கைது செய்யப்பட்டார். வங்கி செயலாளர் தேவராஜ் மற்றும் துணைச் செயலாளர் ஜான்சி சந்திரகாந்த் ஆகிய இருவரும் தலைமறைவாகினர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர். வருகிற ஜனவரி 7-ஆம் தேதி இருவருடைய முன்ஜாமின் முடிவடைகிறது.
இந்த நிலையில் அங்கமங்கலம் கூட்டுறவு வங்கிக்கு துணைச் செயலாளர் ஜான்சி சந்திரகாந்தா விசாரணைக்காக வந்தார். அப்பொழுது விசாரணை அதிகாரி மைக்கேல் வளன் தளபதி முன் ஆஜரானார்.
பொதுமக்கள் முற்றுகை
ஜான்சி சந்திராகாந்திடம் விசாரணை நடந்து கொண்டு இருப்பதை அறிந்த பொதுமக்கள் வங்கிமுன்பு குவிந்து, முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களது நகை மற்றும் டெபாசிட் தொகையை ஒப்படைக்க வேண்டும் என்று கூறி ஜான்சி சந்திராகாந்தாவை பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
துணைச்செயலாளருக்கு முன்ஜாமீன் தேதி முடிவடைந்த உடன் பிரச்சினையை பேசி தீர்த்து வைப்பதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் விசாரணை முடிந்து நிலையில் ஜான்சி சந்திரகாந்தை போலீசார் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்
Related Tags :
Next Story