வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலை இலக்கிய போட்டிகள்; கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலை இலக்கிய போட்டிகள்; கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 17 Dec 2021 9:20 PM IST (Updated: 17 Dec 2021 9:20 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலை இலக்கிய போட்டிகள் நடைபெற உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி:
வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வாக்காளர் தினம்
இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடி வருகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும்; ஜனநாயக நாட்டில் தேர்தல்களின் முக்கியத்துவம், 100 சதவீதம் பதிவு, வாக்காளர் உதவித் தொலைபேசிசெயலி, தூண்டுதல் இல்லா வாக்குப்பதிவு, வாக்காளராக பதிவதின் முக்கியத்துவம், ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடந்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மேற்காணும் தலைப்புகளின் அடிப்படையில் சுவரொட்டிகள் தயாரித்தல், ஓவியப்போட்டி, முழக்கத்திற்கான வார்த்தைகள் ஏற்படுத்துதல், பாட்டுப்போட்டி (2-3 நிமிட வீடியோபதிவு), குழு நடனம் (2-3 நிமிட வீடியோபதிவு) மற்றும் கட்டுரைப் போட்டி போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.
மேற்படி, போட்டிகளுக்காக தயாரிக்கப்படும் எந்தவொரு இனத்திலும் அரசியல் சார்போ, பிறரை புண்படுத்தும் வகையிலான வாசகங்களோ இடம் பெறக் கூடாது. ஒவ்வொரு இனத்திலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவதுடன், முதல் 15 இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியர்களின் படைப்புகள் அனைத்தும் தலைமைத் தேர்தல் அலுவலரின் அலுவலகத்தில் சமர்பிக்கப்பட உள்ளது. எனவே, இந்த போட்டிகள் அனைத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்த வலியுறுத்தப்பட்டு உள்ளது.
25-ந் தேதி
இது குறித்த அனைத்து விவரங்களும் அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொள்ள இயலாத மாணவ, மாணவிகள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் வாக்காளர் பதிவு அலுவலர், உதவி கலெக்டர் அலுவலகங்களில் தங்களுடைய படைப்புகளை 25.12.2021-க்குள் சமர்ப்பிக்கலாம் அல்லது https://www.elections.tn.gov.in/SVEEP2022/officersLogin என்ற இணையதளத்தில் நேரடியாகவும் பதிவேற்றம் செய்யலாம்.
எனவே, அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த போட்டிகளில் பங்கு கொண்டு தேர்தல் ஜனநாயகத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கு கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story