மாணவிகளை வைத்து கழிப்பறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்


மாணவிகளை வைத்து கழிப்பறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 17 Dec 2021 9:41 PM IST (Updated: 17 Dec 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

பட்டிவீரன்பட்டி அருகே மாணவிகளை வைத்து கழிப்பறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியரை கண்டித்து பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி அருகே மாணவிகளை வைத்து கழிப்பறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியரை கண்டித்து பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
கழிப்பறையை சுத்தம் செய்த மாணவிகள்
பட்டிவீரன்பட்டி அருகே செங்கட்டான்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 180-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்கிடையே வீட்டிற்கு திரும்பிய மாணவிகள் சோர்வடைந்து காணப்பட்டனர். இதனால் அவர்களது பெற்றோர் என்னவென்று கேட்டபோது, பள்ளியில் தலைமை ஆசிரியர் கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்ததாகவும், அப்போது பினாயில், பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்ததால் ஒவ்வாமை மற்றும் உடல்நிலை சரியில்லை என்றும் தெரிவித்தனர். மேலும் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என்றும் மாணவிகள் கூறினர். இதை கேட்ட மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
பெற்றோர் முற்றுகை
மேலும் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் நேற்று தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது பள்ளி வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் பாண்டித்துரை, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்து வந்தார். அப்போது பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அவரிடம் மாணவிகள் கூறுகையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் எங்களை தினசரி கழிப்பறையை சுத்தம் செய்ய வைக்கிறார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர் ஒருவர் சாப்பிட்டு முடித்த பின்பு தனது டிபன் பாக்சை கழுவி வைக்க சொல்வார் என்றும் அடுக்கடுக்கான புகார்களை மாணவிகள் தெரிவித்தனர்.
புகார் மீது நடவடிக்கை
பின்னர் ஊர் பொதுமக்கள் சார்பில், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட கல்வி அலுவலரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலரிடம் கேட்டபோது, மாணவிகளின் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி செங்கட்டான்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story