அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து கடலூரில் அ.தி.மு.க. வினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர்கள் அருண்மொழிதேவன், பாண்டியன், சொரத்தூர் ராஜேந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
கடலூர்,
மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் டிசம்பர் 17-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடலூர் மஞ்சக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது அவர்கள் பேசுகையில், தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தற்போதைய முதல்-அமைச்சர் முறையாக பார்வையிட்டு, நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. கண்துடைப்புக்காக மட்டுமே அவர் மழை பாதிப்புகளை பார்வையிட்டுள்ளார். குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறியது, அறிவிப்போடு நின்று விட்டது என்று கூறினர்.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு
பின்னர் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்தும், அம்மா மினி கிளினிக்குகளை மூடும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இதையடுத்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல்குமார் வரவேற்றார்.
இதில் முன்னாள் அமைச்சர்கள் செல்வி ராமஜெயம், எம்.சி.தாமோதரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், அருள், சிவசுப்பிரமணியன், மாநில மீனவரணி இணை செயலாளர் தங்கமணி, மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் கே.எஸ்.கார்த்திகேயன், மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் மாதவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வெங்கட்ராமன், நகர செயலாளர் காசிநாதன், நகர துணை செயலாளர் கந்தன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் காசிநாதன் மற்றும் கடலூர் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story