விழுப்புரம் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்


விழுப்புரம் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 17 Dec 2021 10:15 PM IST (Updated: 17 Dec 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.


விழுப்புரம், 

மத்திய அரசு, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை கைவிட வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்- அதிகாரிகள் சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று முன்தினம் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து, நேற்றும் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 தொழிற்சங்கங்களை சேர்ந்த வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். 

இதனால் மாவட்டத்தில் உள்ள 136 வங்கி கிளைகளில் பெரும்பாலான வங்கிகள் ஊழியர்கள், அதிகாரிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சில வங்கிகள் பூட்டியும் கிடந்தன.

ரூ.400 கோடி வர்த்தகம் பாதிப்பு

மேலும் கோரிக்கையை வலியுறுத்தி விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகன் தலைமை தாங்கினார். அரசு பணியாளர் சங்க முன்னாள் தலைவர் முருகன் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இதில் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ராமசாமி, வெங்கடேசன், முகேஷ், ராமலிங்கம், ஷாஜகான், ஜெயகோபு, முரளிதரன், வைத்தியநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் 2 நாட்களில் ரூ.400 கோடிக்கு காசோலை பரிமாற்றம் மற்றும் பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. அதுபோல் ஏ.டி.எம். சேவையும் முடங்கியது.

Next Story