உடுமலை வழியாக திருச்செந்தூருக்கு முன்பதிவில்லாத விரைவு ரெயில் சேவை தொடங்கியது


உடுமலை வழியாக திருச்செந்தூருக்கு முன்பதிவில்லாத விரைவு ரெயில் சேவை தொடங்கியது
x
தினத்தந்தி 17 Dec 2021 10:16 PM IST (Updated: 17 Dec 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை வழியாக திருச்செந்தூருக்கு முன்பதிவில்லாத விரைவு ரெயில் சேவை தொடங்கியது

உடுமலை,
பாலக்காட்டில் இருந்து உடுமலை வழியாக திருச்செந்தூருக்கு முன்பதிவில்லாத விரைவு ரெயில் சேவை தொடங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில்
பாலக்காடு-திருச்செந்தூர் இடையே பாசஞ்சர் ரெயிலாக இயக்கப்பட்டுவந்த ரெயில், கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 20 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் ரெயில் இயக்கப்பட்டுவருவதைத்தொடர்ந்து கோவையில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக திருச்செந்தூருக்கு ரெயிலை இயக்கும்படி ரெயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து முதலில் பொள்ளாச்சி-திருச்செந்தூர் இடையை ரெயிலை இயக்கத்திட்டமிடப்பட்டு, பின்னர் இந்த ரெயிலை பாலக்காடு வரை நீடித்து இயக்குவதற்கு தென்னக ரெயில்வே முடிவு செய்து உத்தரவிட்டது. அதன்படி 20 மாதங்களுக்குப்பிறகு இந்த ரெயில் முன்பதிவில்லாத விரைவு ரெயிலாக நேற்று முதல் இயங்கத்தொடங்கியது.
இந்த ரெயில் நேற்று  காலை 4.55 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சி வழியாக காலை 7.08 மணிக்கு உடுமலைக்கு வந்து சேர்ந்தது. பிறகு உடுமலையிலிருந்து 7.10 மணிக்கு புறப்பட்டுபழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றது.
நிறுத்தப்படும் இடங்கள்
பாலக்காட்டில் இருந்து தினசரி காலை 4.55 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் பாலக்காடு டவுன், புதுநகரம், கொல்லங்கோடு, முதலமடா, மீனாட்சிபுரம், பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், அம்பாதுறை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், வாஞ்சி மணியாச்சி, தாளையூத்து, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஆழ்வார் திருநகர், நாசரேத், கச்சனாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று சென்று திருச்செந்தூரை சென்றடையும். அதேபோன்று திருச்செந்தூரில் இருந்து தினசரி மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு உடுமலை வழியாகபாலக்காடு செல்லும் ரெயிலும் இந்த இடங்களில் உள்ள ரெயில்நிலையங்களில் நின்று செல்லும்.
பயணிகள் மகிழ்ச்சி
பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் இந்த ரெயிலில் முதல் நாளான நேற்று உடுமலையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பயணிகள் சுமார் 50 பேர் புறப்பட்டு சென்றனர். இந்த
ரெயிலில் மொத்தம் 10 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. பொதுமக்களுக்கு தகவல் தெரியவரும்போது பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Next Story