சோதனை என்ற பெயரில் அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
சோதனை என்ற பெயரில் அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
விழுப்புரம்,
மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
புதிய திட்டங்கள் இல்லை
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. இந்த 7 மாத காலத்தில் சட்டமன்றத்தை கூட்டி முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து அனைத்து துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள்.
ஆனால் எந்தவொரு புதிய திட்டப்பணிகளும் தொடங்கியதாக தெரியவில்லை. நாங்கள் கொண்டு வந்த திட்டங்களைத்தான் உங்களால் செயல்படுத்த முடிகிறது, புதிய திட்டங்கள் எதையும் செய்யவில்லை.
7 மாத கால ஆட்சியில் கொரோனா ஊரடங்கினால் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் இருக்கும் பெற்றோர்களுக்கு ஏதாவது நிதி உதவி வழங்கினார்களா? மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏதாவது நிவாரண உதவி வழங்கப்பட்டதா? .
ரூ.10 கோடி கேட்டனர்
இந்த ஆட்சியில் அரசு அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை, அவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். அரசு உயர் அதிகாரி வெங்கடாசலத்தை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை மிரட்டியுள்ளதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் தற்கொலை சம்பவத்தில் எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறது, அவர் தற்கொலைக்கு முன்பு வடமாவட்டத்தில் அமைச்சராக இருக்கும் ஒருவர், அவரிடம் ரூ.10 கோடி தாருங்கள், உங்கள் மீதுள்ள வழக்குகளை முடித்து வைக்கிறேன் என்று பேசியதாக சொல்லப்படுகிறது. இதனை தி.மு.க. அரசு மூடி மறைக்கிறது. இதை நீங்களே சொல்ல வேண்டும், இல்லையெனில் நாங்கள் சொல்ல வைப்போம்.
அண்ணாமலை மீது கை வையுங்கள்
இந்த அரசின் மீது குற்றம் சாட்டுகிறார், அவதூறு பரப்புகிறார் என்று கூறி மாரிதாசை காவல்துறை கைது செய்கிறது. இங்கு சட்டம்- ஒழுங்கு சரியில்லை, சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது டி.ஜி.பி.யின் பணி, அதை பாதுகாக்காமல் சைக்கிள் ஓட்டுகிறார் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறுகிறார்.
மாரிதாசை கைது செய்யும் காவல்துறை, உங்களுக்கு தைரியம் இருந்தால் அண்ணாமலை மீது கை வையுங்கள் பார்ப்போம். ஏனெனில் அவரும் காவல்துறை அதிகாரியாக இருந்தவர்.
காவல்துறை பணி என்ன என்பது அவருக்கும் தெரியும். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீரழிந்து இருக்கிறது. இந்த அரசில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. ஆகவே பெண்கள், குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு செல்லாதீர்கள். விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டம் கொலைகளமாக மாறியுள்ளது, கொள்ளையர்களின் கூடாரமாகவும் மாறியுள்ளது.
சட்டையை கழற்றாமல் விடமாட்டோம்
மக்களை பற்றி சிந்திக்காமல் அ.தி.மு.க.வை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்றே நினைக்கிறார்கள். எத்தனை வழக்குகள் போட்டாலும் நாங்கள் அதனை சட்டரீதியாக சந்திக்க தயார்.
மக்களுக்காக பாடுபடுகிற ஒரே இயக்கம் அ.தி.மு.க., இது தொண்டர்களின் கட்சி. உங்களைப்போன்று குடும்ப கட்சி இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் அ.தி.மு.க.வை முடக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆட்சி என்பது நிரந்தரமில்லை. 5 ஆண்டு காலம் கழித்து மீண்டும் கண்டிப்பாக அ.தி.மு.க. ஆட்சி மலரும்.
இப்போது லஞ்ச ஒழிப்புத்துறையில் இருக்கிறவர்களின் வீடுகளுக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதே லஞ்ச ஒழிப்புத்துறை வரும், அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சட்டையை கழற்றாமல் விடமாட்டோம்.
பின்விளைவுகளை சந்திப்பீர்கள்
காவல்துறைக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறோம், எங்கள் மீது தவறு இருந்தால் வழக்கு போடுங்கள். சோதனை என்ற பெயரில் பழிவாங்கும் நடவடிக்கைக்காகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகவும், அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் நடந்துகொண்டால் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ஓராயிரம் கருணாநிதி, மு.க. ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. இது தொண்டர்களின் பலமுள்ள இயக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜூணன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அற்புதவேல், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி என்கிற ரகுராமன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், நகர செயலாளர்கள் வண்டிமேடு ராமதாஸ், முருகவேல், மாநில வக்கீல் பிரிவு துணை செயலாளர் செஞ்சி கதிரவன், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், பேட்டை முருகன், சுரேஷ்பாபு, கண்ணன், ராஜா, எசாலம்பன்னீர், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் முகமதுஷெரீப், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் செண்பகசெல்வி குமரன், நகர ஜெயலலிதா பேரவை தலைவர் கோல்டுசேகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் டாக்டர் முத்தையன், துணை செயலாளர் திருப்பதி பாலாஜி, இணை செயலாளர் செங்குட்டுவன், முன்னாள் நகர செயலாளர் காசிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story