பகண்டை கூட்டுரோட்டில் பஸ்வசதி கேட்டு மாணவர்கள் திடீர் சாலை மறியல்
பகண்டை கூட்டுரோட்டில் பஸ்வசதி கேட்டு மாணவர்கள் திடீர் சாலை மறியல்
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் ஒன்றிய கிராமப் பகுதி மற்றும் திருக்கோவிலூர் பகுதியில் இருந்து மாணவர்கள் சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் கல்லூரி முடிந்து மாலையில் வீடு செல்வதற்கு வசதியாக பண்ருட்டி பணிமனை மூலம் இயக்கப்பட்டு வந்த தடம் எண்-211 கடலூர்-சங்கராபுரம் அரசு பஸ் கடந்த ஓராண்டாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மேற்கண்ட பகுதியை சேர்ந்த மாணவர்கள் காலையில் திருக்கோவிலூர்-அத்தியூர் நகர பஸ்சில் அரியலூர் வந்திறங்கி பின்னர் அங்கிருந்து கள்ளக்குறிச்சி நகர பஸ்சில் கல்லூரிக்கு சென்று வர வேண்டி உள்ளது. ஒரே பஸ்சில் கல்லூரிக்கு சென்று வந்த மாணவர்கள் தற்போது 2 பஸ்களில் சென்று வர வேண்டி உள்ளதால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அத்தியூரில் இருந்து திருக்கோவிலூர் சென்ற நகர பஸ் சீக்கிரமே சென்றுவிட்டதால் அங்கு வந்த மாணவர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். ஆத்திரம் அடைந்த அவர்கள் பகண்டை கூட்டுரோடு பஸ் நிறுத்தத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபரிமலை மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குறித்த நேரத்தில் பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மாணவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏற்கனவே இயக்கப்பட்ட தடம் எண்-211 அரசு பஸ்சை உடனடியாக இயக்க வேண்டும் என மாணவர்கள் பொதுமக்கள் கோரி வருகின்றனர்.
Related Tags :
Next Story