வேலூரில் குடிநீருக்காக 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் பொதுமக்கள்
வேலூர் முத்துமண்டபம் அருகே குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குடிநீர் இல்லாததால் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பொதுமக்கள் தண்ணீரை பிடித்து செல்கின்றனர்.
வேலூர்
வேலூர் முத்துமண்டபம் அருகே குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குடிநீர் இல்லாததால் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பொதுமக்கள் தண்ணீரை பிடித்து செல்கின்றனர்.
குடிநீர் பிரச்சினை
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே முத்துமண்டபம் டோபிகானா பகுதியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் சுமார் 300 வீடுகள் உள்ளன. தற்போது 150 வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த குடியிருப்பில் குடிநீர் குழாய் இணைப்பு எதுவும் வழங்கப்படவில்லை. இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்குள்ள துணி துவைக்க பயன்படுத்தப்படும் தொட்டியிலிருந்து பாலாற்று தண்ணீர் எடுத்து வந்து குடிநீருக்கு பயன்படுத்தி வந்தனர். பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இந்த தொட்டிக்கு வரும் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வரவில்லை.
கடந்த 2 மாதங்களாக குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பொதுமக்கள் குடிநீருக்காக திண்டாடி வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்வார்களா? என்ற ஏக்கத்துடனும் தினமும் குடங்களுடன் காத்து கிடக்கின்றனர்.
2 கிலோ மீட்டர் தூரம்..
சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் மற்றும் நடந்து சென்று வேலூர் பழைய பைபாஸ் சாலை அருகே குடிநீர் பிடித்து வருகின்றனர். மாநகராட்சியில் புதிய பஸ் நிலையம் அருகில் அதிலும் பாலாற்றின் கரையில் உள்ள இந்த பொதுமக்களுக்கு குடிநீர் என்பது எட்டாக்கனியாக இருக்கிறது.
அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் இங்கு குடிவந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் எங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு தரவில்லை. முத்து மண்டபம் பகுதியில் துணி துவைக்க பயன்படுத்தக்கூடிய தண்ணீர் தொட்டியிலிருந்து குடிநீர் எடுத்து வந்தோம். தற்போது அங்கேயும் தண்ணீர் வரவில்லை. இதனால் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் நடந்து சென்றும், சைக்கிளில் சென்றும் தண்ணீர் எடுத்து வருகிறோம்.
இந்த குடியிருப்பில் குடிநீர் கிடைக்காததால் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பலர் காலி செய்து விட்டனர். குடிநீர் இணைப்பு இல்லாததால் தான் இங்கு குடிவர பொதுமக்கள் தயங்குகின்றனர். எங்களுக்கு நிரந்தரமாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story