மராட்டியத்தில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 17 Dec 2021 11:15 PM IST (Updated: 17 Dec 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரையிலான பாதிப்பு 40 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை, 
மராட்டியத்தில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரையிலான பாதிப்பு 40 ஆக உயர்ந்துள்ளது. 
மேலும் 8 பேர்
கொரோனாவில் இருந்து மீண்டு வந்த மராட்டியத்திற்கு, தற்போது ஒமைக்ரான் புதிய தலைவலியாக மாறி உள்ளது. நாட்டிலேயே இங்கு தான் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் வரை மாநிலத்தில் 32 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்தநிலையில் மாநிலத்தில் நேற்று மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் கண்டறிப்பட்டுள்ளது. இதில் 6 பேர் புனேயையும், மற்ற 2 பேர் மும்பை, கல்யாண் டோம்பிவிலியை சேர்ந்தவர்கள்.  நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட 8 பேரும் ஆண்கள். 29 முதல் 45 வயது வரை உள்ளவர்கள். 7 பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. ஒருவருக்கு மட்டும் லேசான அறிகுறிகள் உள்ளன.
துபாய் சென்று வந்தவர்கள்
புனேயில் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 4 பேர் துபாய் சென்று வந்தவர்கள். 2 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். இதேபோல மும்பையில் பாதிக்கப்பட்டவர் அமெரிக்காவில் இருந்தும், கல்யாண் டோம்பிவிலியை சேர்ந்தவர் நைஜீரியாவில் இருந்தும் வந்து உள்ளனர். 
ஒமைக்ரான் கண்டறியப்பட்ட 8 பேரும் தடுப்பூசி போட்டு உள்ளனர். இதில் 6 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேர் ஆஸ்பத்திரியில் உள்ளனர்.
25 பேர் குணமடைந்தனர்
மாநிலத்தில் இதுவரை 40 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 14 போ் மும்பை, 10 பேர் பிம்பிரிசிஞ்வட், 6 பேர் புனே புறநகர், 2 பேர் புனே மாநகராட்சி, 2 பேர் கல்யாண் டோம்பிவிலி, 2 பேர் உஸ்மனாபாத் பகுதியை சேர்ந்தவர்கள். லாத்தூர், புல்தானா, நாக்பூர், வசாய் விரார் பகுதியை சோ்ந்த தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மாநிலத்தில் ஒமைக்ரான் பாதித்தவர்களில் 25 பேர் குணமாகி உள்ளனர்.
மாநிலத்தில் நேற்று புதிதாக 902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 12 பேர் பலியானார்கள். மாநிலத்தில் இதுவரை 66 லட்சத்து 47 ஆயிரத்து 840 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 64 லட்சத்து 95 ஆயிரத்து 929 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை வைரஸ் நோய்க்கு 1 லட்சத்து 41 ஆயிரத்து 329 போ் உயிரிழந்து உள்ளனர்.
தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 295 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒருவர் பலியானார். நகரில் இதுவரை 7 லட்சத்து 66 ஆயிரத்து 508 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்து 363 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Next Story