தி.மு.க. அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்


தி.மு.க. அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்
x
தினத்தந்தி 17 Dec 2021 11:30 PM IST (Updated: 17 Dec 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. கூறினார்.

திருவாரூர்;
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. கூறினார். 
ஆர்ப்பாட்டம்                                         
மக்கள் நலன் காக்கும் திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவி வழங்க வேண்டும். வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட உதவும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும். அம்மா மினி கிளினிக்குகளை தமிழக அரசு மூடுவதை கைவிட வேண்டும். கடுமையாக உயர்ந்துள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் புதிய ரெயில் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர்கள் டாக்டர் கோபால், சிவா.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வெள்ள பாதிப்பு
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மழை வெள்ளத்தால் திருவாரூர் மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நிதி ஒதுக்கீட்டிலும் திருவாரூர் மாவட்டத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மாவட்டத்தில் மழையால் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் 3 முறை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என  வலியுறுத்துகிறோம். 
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்து விட்டு ஆட்சிக்கு வந்த உடன் இதுவரை தி.மு.க. அரசு ரூ.1000 வழங்கவில்லை. 
தேர்தல் வாக்குறுதி
நீட் தேர்வை தி.மு.க. அரசால் ரத்து செய்ய முடிந்ததா மத்திய அரசு பெட்ரோல்- டீசல் விலையை குறைத்துள்ளது. இதுபோல் மற்ற மாநிலங்கள் தங்களுடைய வரியை குறைத்து விலை குறைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க. அரசு வாய்மூடி மவுனம் காக்கிறது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். 
 பகல் கனவு
அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ள எழுச்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். பொய் வழக்குப்போட்டு அ.தி.மு.க.வை அழித்துவிடலாம் என்ற தி.மு.க.வின் பகல் கனவு ஒரு நாளும் பலிக்காது. 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story