தவுட்டுப்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 17 Dec 2021 11:31 PM IST (Updated: 17 Dec 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

தவுட்டுப்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

நொய்யல்
அடிக்கடி விபத்து
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம், நஞ்சை புகளூர், கட்டிப்பாளையம், திருக்காடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு தவுட்டுப்பாளையத்தில் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியாவை உடைத்து அந்த வழியாக பொதுமக்கள் சென்று வந்தனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
டெண்டர் விடப்பட்டது
இதனைதொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் தவுட்டுப்பாளையம் உள்பட 8 இடங்களில் மேம்பாலம் அமைத்து சர்வீஸ் சாலை வழியாக சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு செல்ல வசதி செய்து தருவதாக கூறினர். இதையடுத்து, தவுட்டுப்பாளையம் முதல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 8 இடங்களில் மேம்பாலங்கள் கட்ட கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டரை மதுரையைச் சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனம் எடுத்துள்ளது.
பாலம் கட்டும் பணி
இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது தவுட்டுப்பாளையம் பகுதியில் 960 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், சாலையோரம் இருபுறங்களிலும் இருந்த மரங்கள் அனைத்தும் வெட்டி அகற்றிவிட்டனர். மேலும் சாலை ஓரத்தில் மண் அகற்றப்பட்டு வருகிறது. அதேபோல் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக பள்ளவாய்க்காலை அடைத்து மண்ணை வெட்டிப்போட்டு தண்ணீர் செல்வதை தடுத்து உள்ளனர். இதனால் இந்த பகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பாசனத்திற்காக செல்லும் தண்ணீர் தடைபட்டுள்ளது. எனவே அப்பகுதியில் குழாய் அமைத்து அந்த வழியாக பாசனத்திற்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேபோல் பாலத் துறையிலிருந்து தவுட்டுப்பாளையம் வரை இரு புறங்களிலும் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story