திருச்சி மின்வாரிய டிரைவர் கல்லால் அடித்துக் கொலை


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 17 Dec 2021 11:37 PM IST (Updated: 17 Dec 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

குளித்தலை அருகே முன்விரோத தகராறில் திருச்சி மின்வாரிய டிரைவரை கல்லால் அடித்துக் கொலை செய்த பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான அவரது தாயாரை போலீசார் தேடுகிறார்கள்.

குளித்தலை
மின்வாரிய டிரைவர்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை வாட்போக்கி நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் (வயது 42). மனைவி ஜெயலட்சுமி. திருச்சி பெரியமிளகுபாறையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மாணிக்கவாசகம் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கும், இவரது வீட்டின் அருகே உள்ள சீனிவாசன் என்பவரது மனைவி அன்னக்கிளி (55), மகன் கோபாலகிருஷ்ணன் (35) ஆகியோரின் குடும்பத்தாருக்கும் இடையே கழிவுநீர் சாக்கடை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 
கருங்கல்லால் தாக்குதல்
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாணிக்கவாசகம் தனது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீரை வெளியே ஊற்றியுள்ளார். இதைப் பார்த்த கோபாலகிருஷ்ணன் அவரை திட்டியுள்ளார். அப்போது அன்னக்கிளி தனது மகனிடம் கருங்கல்லை கொடுத்து அடிக்க சொல்லியுள்ளார். 
இதில் ஏற்பட்ட தகராறில் இருவரும் தாக்கி கொண்டுள்ளனர். இதை தடுக்க வந்த ஜெயலட்சுமியை அவர்கள் தள்ளி விட்டுள்ளனர். இந்த தகராறில் கருங்கல்லால் கோபாலகிருஷ்ணன் மாணிக்கவாசகத்தை தாக்கியுள்ளார். 
சாவு
இதையடுத்து கோபாலகிருஷ்ணன், அன்னக்கிளி ஆகிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதற்கிடையே தாக்குதலில் படுகாயமடைந்த மாணிக்கவாசகத்தை அவரது உறவினர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கைது
இதுகுறித்து மாணிக்கவாசகத்தின் மனைவி ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் கொலை வழக்குப்பதிந்து கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அன்னக்கிளியை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story