முன்ஜாமீன் மனு தள்ளுபடி:முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய போலீசார் தீவிரம்


முன்ஜாமீன் மனு தள்ளுபடி:முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 17 Dec 2021 11:53 PM IST (Updated: 17 Dec 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

விருதுநகர்,

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

மோசடி வழக்கு

  முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி விஜயநல்லதம்பி பல்வேறு நபர்களுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடமும் அவரது உதவியாளரிடமும் ரூ.1 கோடியே 60 லட்சமும் கொடுத்திருந்ததாகவும், மேலும் கட்சி பணிகளுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் என மொத்தம் ரூ.3 கோடியே 10 லட்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
  இந்த பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்துவிட்டதாக கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி ஆகிய 4 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் கடந்த மாதம் 15-ந்தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மனு தாக்கல்

   இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
  இந்த மனுவை நேற்று காலை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்

  இதற்கிடையில் நேற்று காலை விருதுநகரில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது அவர், கே.டி.ராஜேந்திர பாலாஜியை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Next Story