புதுக்கோட்டையில் 100 பள்ளி கட்டிடங்களை இடிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு


புதுக்கோட்டையில் 100 பள்ளி கட்டிடங்களை இடிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு
x
தினத்தந்தி 18 Dec 2021 12:02 AM IST (Updated: 18 Dec 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை சம்பவம் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 பள்ளி கட்டிடங்களை இடிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை, 
3 மாணவர்கள் பலி
நெல்லையில் பள்ளிக்கூட கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பள்ளிக்கட்டிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிக்கட்டிடங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கவிதாராமு தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கல்வித்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
100 பள்ளி கட்டிடங்களை...
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது:- ‘‘புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளின் கட்டிடங்கள் பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில் உள்ளது. இதில் பள்ளி கட்டிடங்களின் தன்மை குறித்து ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டதில் 300-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது.
இதில் சில கட்டிடங்களில் சேதம் வகைப்படுத்தப்பட்டு பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கட்டிடத்தில் ஒரு சில பகுதியும், தரைகளும் சேதம், பழமையான கட்டிடம், வகுப்பறைகள் இயங்கி வரும் கட்டிடம் சேதம் உள்பட பல கணக்கிடப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 100 பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் நாளை (அதாவது இன்று) முதல் தொடங்கும். தொடர்ந்து படிப்படியாக பணிகள் நடைபெறும்’’. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story