போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடியை தாக்க முயற்சி


போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடியை தாக்க முயற்சி
x
தினத்தந்தி 18 Dec 2021 1:03 AM IST (Updated: 18 Dec 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடியை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொல்லங்கோடு, 
நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடியை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இளம்பெண் மாயம்
நித்திரவிளை அருகே உள்ள பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சாயூ பிரைட். இவருடைய மகள் ஜெர்சிலின் (வயது 19). கடந்த 6-ந் தேதி அன்று ஜெர்சிலின் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை.
இதுகுறித்து நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தொழிலாளியுடன் தஞ்சம்
இந்தநிலையில் மாயமான ஜெர்சிலின் நேற்றுமுன்தினம் இரவு தொழிலாளி ஒருவருடன் நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் பெற்றோர் உறவினர்களுடன் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். உடனே போலீசார், பெற்றோரை தவிர வேறு யாரும் போலீஸ் நிலையம் முன்பு கூடி நிற்க கூடாது என எச்சரித்தனர். ஆனாலும் அவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் அங்கேயே நின்றனர்.
காதல் ஜோடியை தாக்க முயற்சி
பின்னர் ஜெர்சிலினிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், வீட்டின் அருகில் வசிக்கும் மீன்பிடி தொழிலாளி ஸ்டெனோ ஸ்டாலின் (30) என்பவரை 4 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி வேளாங்கண்ணி சென்று ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் எங்களுக்கு பெற்றோர் தரப்பில் இருந்து உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனை கேட்டதும் வெளியே காத்திருந்த உறவினர்கள் ஆத்திரமடைந்து போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து காதல் ஜோடியை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி வெளியேற்றியதோடு, காதல் ஜோடியை தனி அறைக்குள் கொண்டு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் உறவினர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நகைகளை கழற்றி கொடுத்தார்
பின்னர் பெற்றோரை மட்டும் ஜெர்சிலினிடம் பேச அனுமதித்தனர். தங்களுடன் வீட்டுக்கு வரும் படி அவரை பெற்றோர் வலியுறுத்திஅழைத்தனர். ஆனால் காதலனுடன் செல்வதில் அவர் உறுதியாக இருந்தார். 
இதனை தொடர்ந்து நகைகளை கழற்றி கொடுக்கும்படி பெற்றோர், மகளிடம் கூறினர். அவரும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் நகைகளை உடனடியாக கழற்றி கொடுத்தார். பிறகு போலீசார் காதல் ஜோடிக்கு அறிவுரை கூறி இருவரையும் சேர்த்து வைத்து அனுப்பினர். அவர்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றனர்.

Next Story