2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்


2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 18 Dec 2021 1:21 AM IST (Updated: 18 Dec 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சேலம், டிச.18-
சேலத்தில் நேற்று 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கி ஊழியர்கள்
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி சேலம் மாவட்டத்தில் இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்பட அரசுடமையாக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. 
இந்த வங்கிகளில் பணிபுரியும் சுமார் 3 ஆயிரம் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்றும் வங்கி பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.
2-வது நாளாக ஆர்ப்பாட்டம்
சேலம் கோட்டை கனரா வங்கி முன்பு நேற்று 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். சேலம் மாநகரில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக வாடிக்கையாளர்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.
அத்தியாவசிய தேவைக்கு ஏ.டி.எம்.மையங்களில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதனால் ஒருசில ஏ.டி.எம்.மையங்களில் பணம் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காணமுடிந்தது. வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் ரூ.2 ஆயிரம் கோடிக்கு பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story