‘தி.மு.க. அரசின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்’
‘தி.மு.க. அரசின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்’
அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்வதால் தி.மு.க.அரசின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என்று சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஆவேசமாக பேசியதாவது:-
அ.தி.மு.க.வை நேரடியாக எதிர்க்க முடியாமல் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோதனை என்றால் 69 அல்லது 70 இடங்களில் தான் நடக்கிறது.
அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போட்டு வருகின்றனர். இதுபோன்ற மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். வழக்குகளை சட்டரீதியாக சந்தித்து வெல்வோம். ஆட்சி மாறினால் காட்சியும் மாறும். அதனால் தக்க பதிலடி கொடுக்க அ.தி.மு.க.வுக்கு தெரியும்.
6 முறை சிறை சென்றவன்
தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது. அதை தீர்க்க அரசு கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து தி.மு.க. அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம். நாட்டு மக்களுக்காக நான் 6 முறை சிறை சென்றவன். மேடையில் இருக்கின்ற அத்தனை நண்பர்களும் பலமுறை சிறை சென்று வந்தவர்கள். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்யும். மக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அ.தி.மு.க. தான் முதலில் குரல் கொடுக்கும்.
2024-ம் ஆண்டு ஒரேநாடு, ஒரே தேர்தல் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். அப்படி வந்தால் 2 ஆண்டுகளில் உங்களது ஆட்சி முடிந்துவிடும். எனவே தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்யுங்கள். அ.தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்கள், வீழ்ந்துபோவார்கள்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Related Tags :
Next Story