தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
குளம் தூர்வாரப்படுமா?
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா தெக்கூர் கிராமத்தில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல மண்டிக்கிடக்கின்றன. இதனால் கிராம மக்கள் குளத்து தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. விவசாய நிலங்களில் மேயும் ஆடு, மாடுகள் தண்ணீரின்றி பரி தவிக்கினறன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், தெக்கூர்.
சாலையில் ஓடும் கழிவுநீர்
கும்பகோணம் மோதிலால் தெரு பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் பாதாள சாக்கடை ஆள் நுழை குழியிலிருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறாமல் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், கும்பகோணம்.
தார்ச்சாலை வேண்டும்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா அருந்தவபுரம் தோப்புத்தெரு, வீரப்பன் தெரு போன்ற இடங்களில் பல ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரப்படவில்லை. மழை தண்ணீர் தேங்கி சேறும், சதியுமாக உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பள்ளங்களில் மழை நீர் தேங்கி விடுவதால் பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து படுகாயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், அருந்தவபுரம்.
Related Tags :
Next Story