அரசு பஸ்- கார் மோதல்; பெண்கள் உள்பட 4 பேர் சாவு
நியாமதி அருகே அரசு பஸ்-கார் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் பெண்கள் உள்பட 4 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.
சிவமொக்கா:
அரசு பஸ்- கார் நேருக்குநேர் மோதல்
தாவணகெரே மாவட்டம் நியாமதி தாலுகா சின்னிகட்டே கிராமத்தில் சிகாரிபுரா மெயின் ரோட்டில் நேற்று காலை அரசு பஸ் ஒன்று சிகாரிபுராவில் இருந்து நியாமதி நோக்கி வந்து கொண்டு இருந்தது. அதுபோல் நியாமதி அருகே ஜோகா நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது.
அந்த காரும், அரசு பஸ்சும் நியாமதி அருகே சவளங்கா கண்மாய் பாலத்தை கடக்க முயன்ற போது நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் அரசு பஸ்சின் முன் பகுதியும் பலத்த சேதமடைந்தது.
பெண்கள் உள்பட 4 பேர் பலி
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 3 பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் கார் டிரைவர், மற்றொரு பெண் ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் விரைந்து சென்று, உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிவமொக்கா மெக்கான் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கார் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மேலும் பெண்ணுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லாரியும் விபத்தில் சிக்கியது
விபத்தில் சிக்கிய பஸ் மீது பின்னால் வேகமாக வந்த ஒரு லாரி மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 5-க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். அதே வேளையில் லாரி டிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களும் சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து காரணமாக அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நியாமதி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் அந்த சாலையில் போக்குவரத்து சீரானது.
திருமண வீட்டுக்கு சென்றவர்கள்
போலீஸ் விசாரணையில், பலியானவர்கள் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா எடேஹள்ளி கிராமத்தை சேர்ந்த சாரதம்மா (வயது 70), தாட்சாயினி (48), சுமா (50) ஆகியோரும், கார் டிரைவரான சுனில் என்பவரும் பலியானது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் நியாமதி அருகே ஜோகாவில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காரில் சென்ற போது விபத்தில் சிக்கி பலியானது தெரியவந்தது.
இதையடுத்து பலியானவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக நியாமதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். திருமண வீட்டுக்கு சென்ற பெண்கள் உள்பட 4 பேர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story