வண்ண கோலப்பொடி விற்பனை மும்முரம்
மார்கழி மாதத்தில் வீட்டுவாசலை அலங்கரிக்கும் வண்ண கோலப்பொடி விற்பனை தஞ்சையில் மும்முரமாக நடந்து வருகிறது.
தஞ்சாவூர்:
மார்கழி மாதத்தில் வீட்டுவாசலை அலங்கரிக்கும் வண்ண கோலப்பொடி விற்பனை தஞ்சையில் மும்முரமாக நடந்து வருகிறது.
கோலமிடுதல்
தமிழர்களின் பாரம்பரிய பழக்கங்களில் ஒன்றாக கோலமிடுதல் உள்ளது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீட்டு வாசலில் கோலமிட்டாலும், மார்கழி மாதத்தில் அதிகாலைப்பொழுதில் வண்ண, வண்ண கோலமிடுவதையும், தைத்திங்களன்று பிரதானமாக வண்ண கோலமிடுவதையும் பெண்கள் ஐதீகமாக கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு தொடர் மழைக்கு பின் ஜில்லென்ற குளிர் பனியுடன் மார்கழி மாதம் பிறந்துள்ளது. மார்கழி மாதமென்றாலே அது தெய்வீகம் தரக்கூடிய மாதம். இதனால் இந்த மாதம் முழுவதும் அதிகாலையிலேயே பெரும்பாலான வீடுகளின் முன்பு வண்ண கோலங்களை நாம் காண முடிகிறது. கோலப்பொடி என்பது ஐஸ்வர்யத்தின் அடையாளமான கோலங்கள் போட பயன்படுகிறது.
தினமும் ஒரு கோலம்
ஒரு வீட்டின் நுழைவு வாயிலில் கோலப்பொடியால் போடப்பட்ட கோலங்கள் லட்சுமி தேவியை வீட்டிற்கு வரவழைத்து தீய சக்தியை விரட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
மார்கழி தொடங்கியதையொட்டி அதிகாலையில் எழுந்து பெண்கள் தங்களது வீட்டுவாசலில் கம்பிக்கோலம், பாம்புக்கோலம், தாமரைக்கோலம், புள்ளி கோலம், நேர்ப்புள்ளி கோலங்கள், தொட்டில் கோலம், புள்ளிகளிடையே வரையும் கோலம், ஊடுபுள்ளி கோலம் என பல வகையான கோலங்களில் தினமும் ஒரு கோலத்தை போட்டு மகிழ்கின்றனர்.
பல வண்ண கோலப்பொடிகள்
மற்ற மாதங்களை காட்டிலும் மார்கழி மாதத்தில் ஆக்சிஜன் நிறைந்து இருக்கும் என்பதால் அதிகாலையில் கோலம்போடும் பெண்களின் உடல் புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இதனால் மக்கள் அதிக அளவில் வண்ண கோலப்பொடிகளை விரும்பி வாங்கி செல்கின்றனர். தினமும் வெவ்வேறு வண்ணங்களில் கோலமிட பல வண்ண கோலப்பொடிகளை ஆர்வத்துடன் மக்கள் வாங்கி செல்கின்றனர்.
விற்பனை படுஜோர்
இதனால் தஞ்சை மாநகரில் வண்ண கோலப்பொடி விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. தஞ்சை கீழவாசல், அண்ணாசாலை, பழைய மாரியம்மன ்கோவில் சாலை என பல்வேறு இடங்களில் சரக்கு வாகனங்களிலும், சிலர் சாலையோரங்களில் தற்காலிக கடைகள் அமைத்தும் கோலப்பொடியை விற்பனை செய்து வருகின்றனர்.
மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, ரோஸ், ஊதா, கருப்பு, நீலம், காவி, வெள்ளை என 18 வகையான வண்ணங்களில் கோலப்பொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏராளமான பெண்கள் தாங்கள் விரும்பிய வண்ணங்களில் கோலப்பொடிகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
அதிகரிப்பு
இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, நாகரீக மோகம் நாளுக்கு நாள் அதிகரித்தாலும் கோவில் திருவிழா, சுப நிகழ்ச்சிகள், தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் பண்டிகை காலங்களில் வண்ண, வண்ண கோலமிடுவது மங்களகரமாகவே தொடர்கிறது.
அதற்கு உதாரணமாக தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி வண்ண, வண்ண கோலப்பொடி விற்பனை அதிகரித்து காணப்படுகிறது என்றனர்.
Related Tags :
Next Story