கல்லூரி மாணவர்களை கன்னட மொழி படிக்க கட்டாயப்படுத்த கூடாது - கர்நாடக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கன்னட மொழியை கட்டாயம் படிக்கவேண்டும் என்று அரசு பிறபித்த உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது.
பெங்களூரு:
கட்டாய கன்னட மொழி
கர்நாடகத்தில் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் கன்னட மொழியை கட்டாயம் படிக்கவேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், கர்நாடகத்தில் கல்லூரியில் படிக்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வருகிறார்கள். அவர்கள் கன்னட மொழியை கற்பதில் சிரமம் ஏற்படும். கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்க வரும் மாணவ-மாணவிகளை கன்னட மொழியை கற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது. அரசின் இந்த உத்தரவு மூலம் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கர்நாடகத்துக்கு வந்து படிக்க அச்சப்படுகிறார்கள். இதனால் கர்நாடக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
கட்டாயப்படுத்த கூடாது
இந்த மனு மீதான விசாரணை நேற்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, கல்லூரி மாணவர்களை கன்னட மொழியை படிக்க கட்டாயப்படுத்த கூடாது என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், நாடு முழுவதும் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது. கர்நாடகத்திலும் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், மாணவ-மாணவிகளை கன்னட மொழியை படித்தே தீரவேண்டும் என்று கட்டாயப்படுத்தலாமா?. வெவ்வேறு மாநிலங்களில் இருந்து மேல்படிப்புக்காக கர்நாடகம் வருபவர்கள் கன்னட மொழியை படிக்க வேண்டும் என்று கூறுவது சரியானது அல்ல.
அரசின் உத்தரவு ரத்து
கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் கன்னட மொழியை படிக்க வேண்டும் என்று மாநில அரசு கட்டாயப்படுத்த கூடாது. கன்னட மொழியை படிக்க விரும்பும் மாணவர்கள் தாராளமாக படிக்கலாம். ஆனாலும் அவர்களை கட்டாயப்படுத்த கூடாது. இதனால் மாநில அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிடுகிறேன் என்றார்.
Related Tags :
Next Story