விபத்தில் தொழிலாளி பலியான வழக்கில் திடீர் திருப்பம்; ஆயுதத்தால் தாக்கி கொன்ற கேரள வாலிபர் கைது - மதுஅருந்த ரூ.100 கேட்டதால் தீர்த்து கட்டினார்


விபத்தில் தொழிலாளி பலியான வழக்கில் திடீர் திருப்பம்; ஆயுதத்தால் தாக்கி கொன்ற கேரள வாலிபர் கைது - மதுஅருந்த ரூ.100 கேட்டதால் தீர்த்து கட்டினார்
x
தினத்தந்தி 18 Dec 2021 2:03 AM IST (Updated: 18 Dec 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் தொழிலாளி பலியான வழக்கில் திடீர் திருப்பமாக, அவரை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார். மதுஅருந்த ரூ.100 கேட்டதால் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு:
  
விபத்தில் சிக்கியதாக...

  பெங்களூரு கொடிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் பிரதிக். தொழிலாளி. இவர், கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி தனலட்சுமி லே-அவுட்டில் உள்ள இறைச்சி கடை அருகே தலையில் பலத்த காயங்களுடன் நின்றார். இறைச்சிக்கடை உரிமையாளரான சுரேஷ் என்பவர், இதுபற்றி பிரதிக்கின் சகோதரர் சுப்பிரமணிக்கு தகவல் தெரிவித்தார். உடனே விரைந்து வந்திருந்த சுப்பிரமணி, பிரதிக்கை அழைத்து சென்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

  அங்கு விபத்தில் தான் கீழே விழுந்து விட்டதாகவும், இதில் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டதாகவும் சகோதரர் சுப்பிரமணியிடம் பிரதிக் கூறினார். மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பிரதிக் திடீரென்று இறந்து விட்டார். ஏற்கனவே விபத்தில் சிக்கி காயம் அடைந்ததாக பிரதிக் கூறியதால், இதுபற்றி எலகங்கா போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

கொலை என அறிக்கை

  மேலும் பிரதிக் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாருக்கு கிடைத்தது. அதில், பிரதிக் விபத்தில் சிக்கி பலியாகவில்லை என்றும், அவரது தலையில் ஆயுதத்தால் தாக்கி கொலை செய்திருப்பதும் தெரியவந்திருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு கொடிகேஹள்ளி போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில், கொடிகேஹள்ளி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

  சுப்பிரமணியிடம் நடத்திய விசாரணையின் போது தனது சகோதரர் விபத்தில் சிக்கி தலையில் காயம் அடைந்ததாக தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். மேலும் இறைச்சி கடை உரிமையாளரான சுரேஷ் தான் பிரதிக் தலையில் காயங்களுடன் இருப்பது பற்றி தனக்கு தகவல் தெரிவித்தாகவும், போலீசாரிடம் சுப்பிரமணி கூறினார். இதையடுத்து, சுரேசை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

ரூ.100 கேட்டு தகராறு

  அதாவது தனலட்சுமி லே-அவுட்டில் சுரேஷ் நடத்தி வரும் இறைச்சி கடைக்கு அக்டோபர் 17-ந் தேதி பிரதிக் சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த கடைக்கு சுரேஷ் சென்றிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் சுரேஷ் கடையில் தொழிலாளியாக வேலை செய்யும் கேரளாவை சேர்ந்த சமீன் (வயது 28) இருந்துள்ளார். ஏற்கனவே மதுஅருந்தி இருந்த பிரதிக், மேலும் மதுஅருந்துவதற்கு ரூ.100 கொடுக்கும்படி கேட்டு சமீனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சமீன் கடையில் இருந்த ஆயுதத்தை எடுத்து பிரதிக்கை தாக்கி உள்ளார்.

  இதில், அவரது தலையில் பலத்தகாயம் அடைந்து ரத்தம் வந்துள்ளது. அப்போது அங்கு வந்த சுரேஷ், சமீனுடன் நடந்த சண்டை பற்றி வெளியே தெரிவிக்க வேண்டாம், விபத்தில் சிக்கி காயம் அடைந்ததாக சொல்லும்படி பிரதிக்கிடம் கூறியுள்ளார். அதன்படி, பிரதிக்கும் டாக்டரிடமும், சகோதரர் சுப்பிரமணியிடமும் தெரிவித்துள்ளார். ஆனால் பிரதிக் சிகிச்சை பலனின்றி பலியானது பற்றி அறிந்த சமீன் கடையில் இருந்து தலைமறைவாகி இருந்தார்.

கேரள வாலிபர் கைது

  இதுபற்றி சுரேசும் எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்திருந்தார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் பிரதிக் கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியானதை தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சமீன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், மதுஅருந்த ரூ.100 கேட்டு தன்னிடம் சண்டை போட்டதால் ஆத்திரத்தில் ஆயுதத்தால் தாக்கி விட்டதாகவும், அவர் உயிர் இழப்பார் என்று தெரியாது எனவும் சமீன் போலீசாரிடம் கூறியுள்ளார்.

  அதே நேரத்தில் தலையில் காயம் அடைந்த பிரதிக் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை மட்டும் பெற்றதும், அதன்பிறகு முறையாக சிகிச்சை பெறாமல் வீட்டிலேயே இருந்ததும் தெரியவந்துள்ளது. கைதான சமீன் மீது கொடிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story