பலியான 3 மாணவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


பலியான 3 மாணவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2021 2:28 AM IST (Updated: 18 Dec 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பள்ளிக்கூட சுவர் இடிந்து பலியான 3 மாணவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுடன் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நெல்லை:
நெல்லையில் சாப்டர் மேல்நிலைப்பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் அன்பழகன், விஸ்வரஞ்சன், சுதீஸ் ஆகியோர் பலியானார்கள். இந்த 3 மாணவர்களின் உடல்களும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் பிேரத பரிசோதனை செய்யப்பட்டு அங்கு வைக்கப்பட்டு இருந்தது. 

ஆனால் மாணவர்களின் உடல்களை வாங்க மறுத்து அவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியை, நிர்வாகி, கல்வி அதிகாரி, விளையாட்டு அலுவலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பள்ளிகளையும் ஆய்வு ெசய்ய வேண்டும். பள்ளிகளை ஆய்வு செய்யாமல் திறக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், துணை கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களிடம், 3 மாணவர்கள் பலியான சம்பவத்துக்கு காரணமானவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள்.

இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட கலெக்டர் விஷ்ணு, எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், தாசில்தார் ஆவுடையப்பன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து மாணவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்களின் உடல்களுக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டவர்கள் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து முதல்-அமைச்சர் நிவாரணமாக அறிவித்த தலா ரூ.10 லட்சமும் மாணவர்களின் உறவினர்களிடம் வழங்கப்பட்டது. உடல்களை பெற்றுக்கொண்ட பெற்றோர்கள், மாணவர்களின் முகத்தை பார்த்து கதறி அழுதனர். இது அங்கு திரண்டிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இதனால் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை வளாகம் நேற்று மாலை பரபரப்பாக காணப்பட்டது.

இதற்கிடையே, மாணவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். இதில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், பா.ஜனதா மாவட்ட தலைவர் மகாராஜன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், தமிழர் விடுதலைக்களம் மாவட்ட செயலாளர் முத்துகுமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story