மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம்


மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2021 2:42 AM IST (Updated: 18 Dec 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

ராதாபுரத்தில் மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடந்தது.

ராதாபுரம்:
நெல்லை மாவட்ட மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம், ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தாசில்தார் ஏசுராஜன், செல்வகுமார், யூனியன் ஆணையாளர்கள் பிளாரன்ஸ், விமலா, மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல் சேவியர், துணை இயக்குனர் மோகன் குமார், கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் இடிந்தகரை, கூத்தங்குழி, கூட்டப்புளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 2 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் ஏராளமான மீனவர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:- 

புயல் காலத்தில் கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்கும் வகையில், ஒவ்வொரு கடலோர கிராமத்துக்கும் மீன்வளத்துறை சார்பில் மீட்பு படகு வழங்க வேண்டும். சுனாமி குடியிருப்புகளுக்கு பஸ்கள் இயக்க வேண்டும்.
மீனவ கிராமங்களில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தொடங்க வேண்டும். தாமிரபரணி குடிநீர் வழங்க வேண்டும். பழுதடைந்த சுனாமி குடியிருப்புகளை புதுப்பிக்க வேண்டும். மீன்பிடி வலைகள், உபகரணங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். 
மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story