முன்னாள் எம்.பி. மோசஸ் மரணம்
முன்னாள் எம்.பி. மோசஸ் மரணம்
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் மோசஸ். டாக்டரான இவர் முன்னாள் எம்.பி.யாகவும், எம்.எல்.ஏ.வாகவும் பதவி வகித்தவர். இந்தநிலையில் நேற்று மாலை 4 மணிக்கு அவர் திடீர் மரணம் அடைந்தார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவருக்கு வயது 93 ஆகிறது. அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் 1971-ம் ஆண்டு சுதந்திரா கட்சியின் சார்பிலும், 1989, 1991-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும், 1996-ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். 1978-ம் ஆண்டு ராஜ்யசபா எம்.பி.யாகவும் பதவி வகித்தவர்.
இவருக்கு ஷீலா என்ற மனைவியும், டாக்டர் வெனிட்டா பீட்டர்ஸ், டாக்டர் மஞ்சுளா ஸ்டீபன், டாக்டர் அஞ்சனா மாலா பாபி ஆகிய 3 மகள்களும், 5 பேரக்குழந்தைகளும் உள்ளனர். மோசஸ் தந்தை மத்தியாசும் குமரி மாவட்டத்தில் பிரபலமான டாக்டர் ஆவார். மறைந்த மோசஸ் பள்ளி படிப்பை எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கார்மல் பள்ளி ஆகியவற்றிலும், மருத்துவ படிப்பை சென்னை மருத்துவக் கல்லூரியிலும் பயின்றவர். இவர் குமரி மாவட்ட சி.எஸ்.ஐ. செயலாளர், துணைத்தலைவர், பொருளாளர் ஆகிய பொறுப்புகளையும், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் தாளாளர் பொறுப்பையும் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நல்லடக்க ஆராதனை இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணி அளவில் நாகர்கோவில் சி.எஸ்.ஐ. ஹோம் சர்ச் முதலாவது கல்லறை தோட்டத்தில் நடைபெறுகிறது.
இதற்கிடையே நேற்று மோசஸ் உடலுக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story