தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2021 3:24 AM IST (Updated: 18 Dec 2021 3:24 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்:

மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க.வினர், பெட்ரோல்- டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கிட வேண்டும். பொங்கல் விழாவை கொண்டாட உதவும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும், அம்மா மினி கிளினிக்குகளை தி.மு.க. அரசு மூடுவதை கண்டித்தும், அரசின் அலட்சியத்தால் கடுமையாக உயர்ந்திருக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை எதிர்த்தும், தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் அ.தி.மு.க. வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Next Story