கஞ்சா விற்பனை ஒரே வாரத்தில் 38 பேர் கைது - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை
சென்னையில் கஞ்சா விற்பனை ஒரே வாரத்தில் 38 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பங்களில் ஈடுப்படுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கு ‘போதை தடுப்பு நடவடிக்கை’ என்ற பெயரில் சிறப்பு சோதனைகள் நடத்த வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். .
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வாகன தணிக்கை மற்றும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் போலீசார் நடத்திய சோதனை வேட்டையில் கடந்த 10-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலான ஒரு வார காலத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.64 லட்சத்து 42 ஆயிரத்து 500 மதிப்பிலான 64 கிலோ 250 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 மோட்டார் சைக்கிள்கள், 1 ஆட்டோ, 1 செல்போன், ரூ.42 ஆயிரத்து 800 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் நேற்று முன்தினம் அரும்பாக்கம் போலீசார் வாகன சோதனையின்போது 10 கிலோ கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த மதுரை மாவட்டம் மதிச்சியம் பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் (27), வில்லிவாக்கம் பாரதிநகரை சேர்ந்த சூர்யா (23) ஆகிய 2 பேர் சிக்கினர்.
கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
Related Tags :
Next Story