டிரைவருக்கு திடீர் வலிப்பு நோய்: தறிகெட்டு ஓடிய அரசு பஸ் ஆட்டோ மீது மோதி விபத்து
திருத்தணியில் டிரைவருக்கு திடீரென ஏற்பட்ட வலிப்பு நோயால் அரசு விரைவு பஸ் ஆட்டோ மீது மோதி நின்றது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருத்தணி,
திருத்தணியை அடுத்த புச்சிரெட்டி பள்ளி கிராமத்தை சேந்தவர் ஹேமநாதன் (வயது 35). அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவாக பணியாற்றி வரும் இவர், நேற்று காலை திருப்பதியில் இருந்து திருத்தணி வழியாக சென்னை கோயம்பேடுக்கு, அரசு விரைவு பஸ்சை ஓட்டி சென்றார். பஸ்சில் 31 பயணிகள் இருந்தனர். இந்தநிலையில், திருத்தணி பை-பாஸ் ரவுண்டானா சாலையில் பயணிகளை இறக்கி விட்டு பஸ்சை இயக்கியபோது டிரைவர் ஹேமநாதனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
இதனால் மயங்கிய நிலையில், அவர் இருக்கையிலேயே சரிந்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தறிகெட்டு ஓடியது. இதனையறிந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். அப்போது டிரைவர் ஹேமநாதன் சுதாரித்து கொண்டு பஸ்சை லாவகமாக ஓட்ட முயன்றார்.
இதில் கட்டுப்பாடு இன்றி சென்ற பஸ் சாலையோரம் நின்ற சரக்கு ஆட்டோ மீது பயங்கரமாக மோதி நின்றது. இதனால் திருப்பதியிலிருந்து திருத்தணி வழியாக சென்னைக்கு செல்ல இருந்த 31 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதைத்தொடர்ந்து வலிப்பு வலியால் துடித்த டிரைவர் ஹேமநாதனை அங்கிருந்த பயணிகள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தகவலறிந்த போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story