யானை, காட்டெருமை நடமாட்டம் அதிகரிப்பு


யானை, காட்டெருமை நடமாட்டம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 18 Dec 2021 7:11 PM IST (Updated: 18 Dec 2021 7:11 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர்-மைசூரு சாலையில் காட்டுயானை, காட்டெருமை நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

கூடலூர்

கூடலூர்-மைசூரு சாலையில் காட்டுயானை, காட்டெருமை நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

பசுமையான வனப்பகுதி

முதுமலை புலிகள் காப்பகத்தில் கார்குடி, தெப்பக்காடு, முதுமலை, மசினகுடி, சீகூர், நீலகிரி கிழக்கு பள்ளத்தாக்கு உள்ளிட்ட வனப்பகுதியில் காட்டுயானைகள், புலிகள், கழுதைப்புலிகள், செந்நாய்கள், கரடிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இங்கு கடந்த சில மாதங்களாக பருவமழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. மேலும் வனமும் பசுமையாக காட்சி அளிக்கிறது.

இதன் காரணமாக காட்டுயானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம் தாராளமாக கிடைக்கிறது. இதனால் முதுமலை வனப்பகுதியில் வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக தென்படுகிறது. இதை வனத்துறை வாகனங்களில் சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். 

வனவிலங்குகள் நடமாட்டம்

இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூரு, மசினகுடி மற்றும் கூடலூர், ஊட்டிக்கு செல்லும் சாலைகளில் காட்டுயானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக மாலை நேரத்தில் மாயார் ஆற்றின் கரையோரம் தண்ணீர் குடித்துவிட்டு கூடலூர்-மைசூரு சாலையோரத்தில் நின்று புற்களை மேய்ந்து வருகிறது. 

சில சமயங்களில் சாலையை கடக்கின்றன. இந்த சமயத்தில் வாகனங்களை வேகமாக இயக்குவதால் வனவிலங்குகள் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதனால் மாலை அல்லது இரவில் வாகனங்கள் வேகமாக இயக்கக்கூடாது. அவ்வாறு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாகன ஓட்டிகளுக்கு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

வேகமாக இயக்கக்கூடாது

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை இரவு 9 மணிக்கு மூடப்படுகிறது. இதன் காரணமாக ஊட்டியில் இருந்து தாமதமாக வரும் வாகனங்கள் இரவு 9 மணிக்குள் எல்லையை கடக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் முதுமலை சாலையில் வேகமாக செல்வதை காண முடிகிறது.

இதனால் வனவிலங்குகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதை தவிர்க்க டிரைவர்கள் தங்களது வாகனங்களை வேகமாக இயக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story