பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது


பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 18 Dec 2021 7:11 PM IST (Updated: 18 Dec 2021 7:11 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தின் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.

ஊட்டி

நெல்லையில் சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தின் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.

ஆய்வு செய்ய உத்தரவு 

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்ததால் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக பள்ளிகள் திறந்து செயல்பட்டு வருகிறது. அதற்கு முன்பு பள்ளிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில் நெல்லையில் ஒரு தனியார் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக அனைத்து பள்ளிகளிலும் பழுதடைந்த கட்டிடங்கள் உள்ளதா? என்று ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. 

விளக்கம் அளிக்க அறிவுரை

நீலகிரியில் குன்னூர் மற்றும் கூடலூர் கல்வி மாவட்டங்களில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என 700-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 

இந்த பள்ளிகளில் சுற்றுச்சுவர், தடுப்புச்சுவர், கழிப்பிடம், வகுப்பறைகள், மேற்கூரை போன்றவை ஏதேனும் பழுதடைந்து உள்ளதா?, இடியும் தருவாயில் காணப்படுகிறதா? என்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பார்வையிட்டு பழுதடைந்து இருந்தால் அதனை புகைப்படம் எடுத்து அதுகுறித்த தகவலை மின்னஞ்சல் மூலம் பள்ளி கல்வித்துறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடர் மழை காரணமாக மரங்கள், கிளைகள் விழுந்து மேற்கூரை சேதம் அடைந்து உள்ளதா? என்றும் விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

கணக்கெடுக்கும் பணி

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டிடங்கள் பழுதடைந்து அல்லது விரிசல் ஏற்பட்டு உள்ளதா? என்பதை புகைப்படங்களுடன் அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

 அதன்பின்னர் அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு பள்ளிகளில் கண்டறியப்பட்ட பழுதடைந்த கட்டிடங்கள் முன்னெச்சரிக்கையாக இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே பள்ளிகள் திறப்பதற்கு முன்பு பழுதடைந்த கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது என்றார். பள்ளி நிர்வாகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு பழுதடைந்த கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.


Next Story