நீரோடையை சொந்த செலவில் தூர்வாரும் விவசாயிகள்
விளைநிலங்களில் மழைநீர் புகுவதை தடுக்க விவசாயிகள் நீரோடையை சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர்.
கோத்தகிரி
விளைநிலங்களில் மழைநீர் புகுவதை தடுக்க விவசாயிகள் நீரோடையை சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர்.
மலைக்காய்கறி சாகுபடி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறி விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் கோத்தகிரி அருகே காவிலோரையில் நீரோடை ஒன்று செல்கிறது.
இதை நம்பி காவிலோரை, குருக்குத்தி, வ.உ.சி. நகர், ஓடன்துறை உள்ளிட்ட கிராம விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலைக்காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். இதற்கிடையில் அந்த நீரோடை கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இதனால் புதர் செடிகள் வளர்ந்து நீரோட்டம் தடைபட்டு உள்ளது.
பயிர்கள் சேதம்
இதனால் மழைக்காலத்தில் அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து வருகிறது. கடந்த மாதம் பெய்த பலத்த மழையின்போது அங்கு சாகுபடி செய்த கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்டவை சேதம் அடைந்தன.
இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். எனவே அந்த நீரோடையை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தூர்வாரும் பணி மும்முரம்
இதனால் விவசாயிகள் தங்களது சொந்த செலவில் நீரோடையை தூர்வார முடிவு செய்தனர். அதன்படி நீரோடையில் ஆக்கிரமித்து வளர்ந்து உள்ள புதர் செடிகளை வெட்டி அகற்றி தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து காவிலோரை கிராம விவசாயிகள் கூறும்போது, நீரோடையை முறையாக தூர்வாராததால் தொடர்ந்து விளைநிலங்கள் சேதம் அடைந்து வருகின்றன. கோடைக்காலத்திலும் மண்ணின் உள்ள ஈரப்பதம் காரணமாக பயிர்கள் அழகி விடுகிறது. இதனால் விவசாயிகள் இணைந்து சொந்த செலவில் நீரோடையை தூர்வாரி வருகிறோம் என்றனர்.
Related Tags :
Next Story