தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
எரியாத மின்விளக்குகள்
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி ஆர்.சி.நடுநிலைப்பள்ளி முதல் கூனியூர் வரை உள்ள மின்விளக்குகள் கடந்த 2 மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பணி முடிந்து வரும் ெபாதுமக்கள் வீடு திரும்புவதற்கு அச்சமாக உள்ளது. மேலும், அந்த பகுதியில் சாலையும் மோசமாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமசுப்பிரமணியன், கூனியூர்.
கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
அம்பை தாலுகா 21-வது வார்டு முடப்பாலம் ஊர் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் வீடுகளின் முன்பு தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் பாதாள சாக்கடை கழிவுநீரை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
இசக்கிமுத்து, முடப்பாலம்.
வேகத்தடை அமைக்க வேண்டும்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் மெயின் தெரு பகுதி முக்கிய சாலையாக உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் வேகமாக செல்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் அச்சப்படுகிறார்கள். எனவே, அந்த பகுதியில் வேகத்தடை அமைத்தால் நன்றாக இருக்கும்.
சக்தி, ஆலங்குளம்.
பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?
வீரகேரளம்புதூர் தாலுகா வடக்கு காவலாக்குறிச்சி வழியாக வெங்கடேஷ்வரபுரத்தில் இருந்து சுரண்டை வரை தடம் எண் 21 அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. சாலை பணி காரணமாக இந்த பஸ் இயக்கப்படாமல் இருந்தது. தற்போது சாலை பணி முடிவடைந்தும் பஸ் இயக்கப்படாமல் உள்ளது. பஸ் மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
வசந்தகுமார், வடக்கு காவலாக்குறிச்சி.
* கடையநல்லூரில் இருந்து சுரண்டைக்கு கடம்பன்குளம் வழியாக 7 ஏ அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இந்த பஸ் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் அவதிப்படுகிறார்கள். நிறுத்தப்பட்ட இந்த பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மணிகண்டன், சேர்ந்தமரம்.
ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்
செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் செங்கோட்டை விசுவநாதபுரம் ரெயில்வே கேட் தினமும் 25-க்கும் மேற்பட்ட முறை அடைக்கப்படுகிறது. இதன் காரணமாக காலை, மாலை நேரங்களில் ரெயில்வே கேட்டின் இருபுறமும் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், பணிக்கு செல்பவர்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, பொதுமக்களின் நலன் கருதி இந்த பகுதியில் ரெயில்வே நிர்வாகம் சார்பில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுகிறேன்.
ராஜீவ்காந்தி, செங்கோட்டை.
சாலையில் வீணாக செல்லும் குடிநீர்
தென்காசி ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே பீடர் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. மேலும் அங்கு பள்ளம் ஏற்பட்டு அதில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
சுபாஸ்சந்திரபோஸ், தென்காசி
பயணிகள் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தில் இருக்கைகள் உடைந்தும், மழைநீரில் நனைத்து துருப்பிடித்தும் உள்ளது. மேலும் நிழற்கூடத்தின் மேற்கூரை உடைந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் அங்கு இருந்து பஸ் ஏறுவதற்கு அச்சப்படுகிறார்கள். எனவே, பயணிகளின் நிழற்கூடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
செல்வமுருகன், திருச்செந்தூர்.
வீடுகளை சூழ்ந்த மழைநீர்
தூத்துக்குடி மாநகராட்சி ஆதிபராசக்தி நகர் 1, 2-ம் தெருக்களில் தற்போது பெய்த மழையால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மழைநீரை அகற்ற மாநகராட்சியில் பலமுறை புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நவீன்குமார், தூத்துக்குடி.
ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கப்படுமா?
கோவில்பட்டி தாலுகா தெற்கு திட்டங்குளம் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டி 1 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. இந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை உடனடியாக திறக்க வேண்டுகிறேன்.
சரவணக்குமார், தெற்கு திட்டங்குளம்.
Related Tags :
Next Story