விக்கிரவாண்டி பகுதியில் நெடுஞ்சாலையோர ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு புரோட்டா உள்ளிட்ட பொருட்கள் கொட்டி அழிப்பு
விக்கிரவாண்டி பகுதியில் நெடுஞ்சாலையோர ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது புரோட்டா உள்ளிட்ட உணவு பொருட்களை கைப்பற்றி அவர்கள் அழித்தனர்.
விக்கிரவாண்டி,
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள சில ஓட்டல்களில் தரமற்ற முறையில் உணவுகள் வழங்கப்படுவதாகவும், பொருட்களின் விலையும் உயர்ந்து இருப்பதாக பலர் சமூக வலைதளங்கள் வாயிலாக குற்றம் சாட்டி வந்தனர்.
இதுபற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் மோகன், உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திடீர் ஆய்வு
அதன்பேரில், விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமனஅலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோவன், அன்பு பழனி, கதிரவன் ஆகியோர் கொண்ட குழுவினர் விக்கிரவாண்டி சுங்கசாவடி அருகே உள்ள ஓட்டல்கள் மற்றும், வி.சாலை, பனையபுரம், பாதிராப்புலியூர் பகுதியில் உள்ள ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஓட்டல் சமையலறையின் சுகாதாரம், உணவு, குழம்பு, டீத்தூள், பால், தின்பண்டம், குளிர்பானங்களின் கால அவகாசம் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்து, காலாவதி தேதி இல்லாத உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
காலாவதி பொருட்கள்
அதன்படி, ஓட்டல்களில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாத உணவுப்பொருட்கள் 20 கிலோ, செயற்கை நிறமூட்டிய கார வகைகள் 8 கிலோ, நாள்பட்ட இட்லிமாவு மற்றும் புரோட்டா 40 கிலோ, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 12 கிலோ ஆகியவற்றை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டு அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
மேலும் 6 ஓட்டல்களின் உரிமையாளர்களுக்கு அவர்கள் எச்சரிக்கை நோட்டீசு வழங்கினர்.
வாட்ஸ்-அப் எண் வெளியீடு
அதோடு அனைத்து நெடுஞ்சாலையோர ஓட்டல்களிலும் வாட்ஸ்-அப் புகார் எண் ஒட்டப்பட்டது. எனவே நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் உணவு பாதுகாப்பு துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும்,
அந்த ஓட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் குறைகள் இருந்தாலும் அதுதொடர்பான புகார்களை பொதுமக்கள், 9444042322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story