கிருஷ்ணகிரி, கல்லாவியில் 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு
கிருஷ்ணகிரி, கல்லாவியில் 2 வீடுகளில் நகை, பணம் திருடபட்டிருந்தது.
கல்லாவி:
கிருஷ்ணகிரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காதர் பாஷா (வயது 65). ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர். இவர் கடந்த 11-ந் தேதி குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்தார். அந்த நேரம் மர்ம நபர்கள் இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த ரூ.30 ஆயிரத்தை திருடி சென்றனர். இது குறித்து காதர்பாஷா கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லாவியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (47). நேற்று முன்தினம் அவர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். மதியம் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 6 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சக்கரவர்த்தி வீட்டின் அருகில் உள்ள திம்மராயன் என்பவரின் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்தது. திம்மராயன் குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். அவர் வந்த பிறகே வீட்டில் பொருட்கள் திருட்டு போய் உள்ளதா? என தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story