உறவினர்கள் சாலை மறியல்
உறவினர்கள் சாலை மறியல்
காங்கேயம்,
காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வாலிபர் திடீரென உயிரிழந்தார். அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெயிண்டர்
காங்கேயம்-தாராபுரம் சாலையில் உள்ள ஜெ.நகரை சேர்ந்தவர் சேகர் என்பவரது மகன் கவின் (வயது 23). இவருடைய மனைவி சிநேகா (20). இ்வர்களுக்கு ஜெகதீஷ் (1) என்ற குழந்தை உள்ளது. வாலிபர் கவின் பெயிண்டராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் கவினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக கவின் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளார்.
நெஞ்சுவலியால் சாவு
அங்கிருந்த அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் கவினுக்கு முதலுதவி சிகிச்சையாக ஊசி ஒன்றை போட்டுவிட்டு 2 மாத்திரைகளை கொடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து கவின் கிளம்பியபோது மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் வாந்தி எடுத்துள்ளார்.
இதனால் கவினின் நண்பர்கள் மீண்டும் மருத்துவமனை கதவை தட்டி ஊழியரை அழைத்து பரிசோதனை செய்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து கவின் இறந்துவிட்டார் என்று மருத்துவமனை ஊழியர் தெரிவித்துள்ளார்.
சாலை மறியல்
இதைத் தொடர்ந்து கவினின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஜெ.நகர் பகுதி பொதுமக்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர். மருத்துவர் இல்லாத நிலையில் மருத்துவமனை ஊழியர் தவறான சிகிச்சை அளித்ததால்தான் கவின் இறந்துவிட்டார் என குற்றம் சாட்டி மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த காங்கேயம் தாசில்தார் சிவகாமி மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை அடுத்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
வலியுறுத்தல்
இந்த நிலையில் மீண்டும் மதியம் 2 மணியளவில் மறியலில் ஈடுபட முயன்றனர். உயிரிழந்த கவின் குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் கவினின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story