தர்மபுரி மாவட்டத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை கலெக்டர் திவ்யதர்சினி தகவல்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த பழைய பள்ளி கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்தார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பயன்பாட்டில் இல்லாத, பழுதடைந்த பழைய பள்ளி கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்தார்.
பழுதடைந்த கட்டிடங்கள்
தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத, பழுதடைந்த, இடிக்கப்பட வேண்டிய பழைய கட்டிடங்களை கண்டறிந்து அவற்றை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டுமென அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயன்பாட்டில் இல்லாத, பழுதடைந்த, இடிக்கப்பட வேண்டிய பழைய கட்டிடங்களை கலெக்டர் திவ்யதர்சினி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது 2 கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. உடனே அந்த கட்டிடத்தின் விவரங்கள், கட்டிட உறுதித்தன்மை உள்ளிட்டவை குறித்து கலெக்டர் விரிவாக கேட்டறிந்தார்.
பூட்டி வைக்க வேண்டும்
அப்போது மிகவும் பழமையான, பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டிடத்தை மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் விடுமுறை தினத்தில் இடிக்க வேண்டும். பயன்படுத்தப்படாத கட்டிடங்கள் இருப்பின் மாணவர்கள் அந்த கட்டிடத்திற்குள் நுழையாத படி பூட்டி வைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத, பழுதடைந்த, இடிக்கப்பட வேண்டிய பழைய கட்டிடங்கள் குறித்து பள்ளி கல்வித்துறையின் மூலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், சீரமைக்கப்பட வேண்டிய பள்ளி கட்டிடங்கள், பள்ளி கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளி கட்டிடங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் வாயிலாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இடிக்க நடவடிக்கை
இந்த பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க ஏதுவாக துறைகளை சார்ந்த அலுவலர்கள் கொண்ட குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த குழுவை கொண்டு அனைத்து பள்ளிகளிலும் உள்ள அனைத்து கட்டிடங்களின் உறுதி தன்மையை சரிபார்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பயன்பாட்டில் இல்லாத மற்றும் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்த ஆய்வின் போது, முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, தாசில்தார் ராஜராஜன், பள்ளி தலைமை ஆசிரியை தெரேசாள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story