உடுமலை மூணாறு சாலையில் சிங்கவால் குரங்குகள் நடமாட்டம்
உடுமலை மூணாறு சாலையில் சிங்கவால் குரங்குகள் நடமாட்டம்
தளி:
உடுமலை-மூணாறு சாலையில் சிங்கவால் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வாகனங்களை கவனமாக இயக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வனவிலங்குகள்
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, மலைப்பாம்பு, சிங்கவால்குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
அதுதவிர அரிய வகை உயிரினங்களும் மூலிகைகள், தாவரங்கள் வனப்பகுதியில் வளர்ந்து வருகிறது.வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் இருப்பிடத்தை மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதிகள் பூர்த்தி செய்து தருகிறது. கோடை காலங்களில் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்வதுடன் நீர்வரத்து இழந்து விடுகிறது.
சிங்கவால் குரங்குகள்
ஆனால் இந்த ஆண்டு பருவமழை தீவிரம் அடைந்ததால் வனப்பகுதியில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டதுடன் வனப்பகுதியும் பசுமைக்கு மாறியது. இதனால் அடிவாரப்பகுதியில் முகாமிட்டுள்ள வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் திரும்பி சென்றது. ஆனால் பசுமையின் காரணமாக கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளதால் அவற்றின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் யானை, மான், சிங்கவால் குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் மீண்டும் அடிவாரப்பகுதிக்கு திரும்பி வந்துவிட்டன.
அவை உடுமலை- மூணாறு சாலையின் ஓரங்களிலும் அமராவதி அணை பகுதியிலும் முகாமிட்டு வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக உடுமலை- மூணாறு சாலையில் சிங்கவால் குரங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் அடிவாரப்பகுதியில் முகாமிட்டுள்ள சிங்கவால் குரங்குகள் சாலையில் விளையாடி மகிழ்ந்த வண்ணம் உள்ளது.
வனத்துறை எச்சரிக்கை
அத்துடன் வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்குள்ள மரங்களில் தஞ்சம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையைக் கடக்கும் வரையில் பொறுமை காத்து செல்ல வேண்டும்.
வனவிலங்குகளை துன்புறுத்துவது அவை மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவது உள்ளிட்ட செயல்களில் வாகன ஓட்டிகள் ஈடுபடக்கூடாதென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story