ரூ.6 லட்சம் கேட்டு வியாபாரி கடத்தல்; 5 பேர் கும்பல் கைது
கோவில்பட்டியில் ரூ.6 லட்சம் கேட்டு வியாபாரியை கடத்திய 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் ரூ.6 லட்சம் கேட்டு வியாபாரியை கடத்திய 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மீன் வியாபாரி கடத்தல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் தர்மதுரை. இவருடைய மகன் சிவா (வயது 37). இவர் அப்பகுதியில் மீன் கடை நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ராஜகோபால் நகரில் வசித்து வரும் தனது தாயாரை பார்ப்பதற்காக வந்தார்.
அப்போது அங்கு காரில் வந்த மர்மநபர்கள் சிவாவை கடத்திச் சென்றனர். பின்னர் அவர்கள், சிவாவின் மனைவி மல்லிகாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, ‘உன் கணவரை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். ரூ.6 லட்சம் கொடுத்தால்தான் விடுவோம்’ என்று மிரட்டியுள்ளனர்.
போலீஸ் தனிப்படை தேடுதல்
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மல்லிகா இதுபற்றி கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில், கோவில்பட்டி துணை சூப்பிரண்டு உதயசூரியன் மேற்பார்வையில், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் அரிகண்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினரின் ஆலோசனைப்படி, சிவாவின் மனைவி மல்லிகாவிடம், கடத்தியவர்களை தொடர்பு கொண்டு தன்னிடம் பணம் இருப்பதாகவும், எங்கு வந்து பணம் தரவேண்டும்? என்றும் கேட்க வைத்தனர். அப்போது மர்மநபர்கள், கோவில்பட்டியில் இருந்து கயத்தாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே பணத்துடன் வருமாறு கூறினர்.
5 பேர் கும்பல்
இதையடுத்து கடத்தல் கும்பலை பிடிப்பதற்காக போலீசார் நேற்று அதிகாலையில் அப்பகுதியில் முன்னதாகவே சென்று பதுங்கி இருந்தனர். இதனை கவனித்த கடத்தல்காரர்கள் உடனடியாக காரை எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர். மேலும், போலீசில் மாட்டிவிடுவோம் என்று பயந்து, சிவாவை காட்டுப்பகுதியில் இறக்கி விட்டு சென்றனர்.
ஆனாலும் போலீசார் அந்த கும்பலை பின்தொடர்ந்து விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். தொடர்ந்து, காரில் இருந்த 5 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், கோவில்பட்டி மந்திதோப்பு ராஜகோபால் நகரைச் சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (29), விஜயன் மகன் ரமேஷ் (24), நாலாட்டின்புதூர் விஸ்வநாத நகரைச் சேர்ந்த மரியதாஸ் மகன் அகஸ்டின் ராஜா (31), வடக்கு இலுப்பையூரணி கருப்பசாமி மகன் கருத்தப்பாண்டி (25), விஜயாபுரி நடுத்தெருவை சேர்ந்த ராஜகோபால் மகன் ஏமராஜ் (25) என்பது தெரியவந்தது.
கார்கள் பறிமுதல்
மணிகண்டனுக்கும், கடத்தப்பட்ட சிவாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக மணிகண்டன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிவாவை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.
கடத்தல் வழக்கில் துரிதமாக செயல்பட்ட போலீசாரை சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார். மீன் வியாபாரியை காரில் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story