குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்


குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 18 Dec 2021 10:25 PM IST (Updated: 18 Dec 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்

அனுப்பர்பாளையம்:
சிறுபூலுவப்பட்டி அருகே ஒரு மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் வினியோகம் 
திருப்பூர் மாநகராட்சி 14-வது வார்டு சிறுபூலுவப்பட்டியை அடுத்த எஸ்.பி.நகர் 5 வீதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதன் காரணமாக ஒருசில இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும்  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள்  அ.தி.மு.க. 14-வது வார்டு செயலாளர் பாசறை தங்கராஜ் தலைமையில் 15 வேலம்பாளையம் ரிங்ரோடு எஸ்.பி.நகர் பகுதியில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
 போக்குவரத்து பாதிக்கப்பட்டது
 இதுகுறித்து தகவலறிந்த 15 வேலம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கந்தமணி தலைமையில் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற 1-வது மண்டல உதவி கமிஷனர் சுப்பிரமணியம்  2 நாட்களுக்குள் குடிநீர் சீராக வழங்கநடவடிக்கை எடுக்கப்படும்  என்று உறுதியளித்தார். மேலும் தற்காலிகமாக அந்த பகுதிக்கு லாரி மூலமாக குடிநீர் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story