ரோட்டில் பாய்ந்த கழிவு நீரால் வாகன ஓட்டிகள் அவதி


ரோட்டில் பாய்ந்த கழிவு நீரால்  வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 18 Dec 2021 10:26 PM IST (Updated: 18 Dec 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

ரோட்டில் பாய்ந்த கழிவு நீரால் வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூர்.
திருப்பூர் புஷ்பா ரவுண்டானா,அவினாசி ரோடு-பி.என்.ரோடு சந்திப்பு பகுதியில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால் இங்கு கழிவு நீர் குளம் போல் தேங்கி இப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அளவுக்கதிகமான கழிவு நீர் சேகரமாகும் போது கால்வாய் நிரம்பி ரோட்டில் கழிவு நீர் பாய்கிறது. இதேபோல் நேற்றும் இந்த கால்வாயில் இருந்து கழிவு நீர் ரோட்டில் ஆறாக பாய்ந்தோடியது. இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசியது. மேலும் கழிவு நீரின் மேலாக வாகனங்களை ஓட்டி செல்வதற்கு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இதேபோல் கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்ற போது அருகில் சென்ற வாகன ஓட்டிகள் மீது கழிவு நீர் பீய்ச்சியடித்தது. 
இதனால் பலர் கழிவு நீர் அபிஷேகத்திற்குள்ளாகினர். 
மேலும், நடந்து செல்லும் பொதுமக்களும் கழிவு நீருக்குள்ளாக நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. அருகாமையில் உள்ள கடையில் இருப்பவர்களும் துர்நாற்றத்தால் சிரமப்பட்டனர். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லக்கூடிய பிரதான ரோட்டில் இவ்வாறு கழிவு நீர் பாய்வது பெரும் இடையூறை ஏற்படுத்தும். எனவே, இனியும் இதுபோன்ற நிகழ்வு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.

Next Story