பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு அலுவலர் நாளை புதுக்கோட்டை வருகை
பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு அலுவலர் புதுக்கோட்டைக்கு நாளை (திங்கட்கிழமை) வருகை தருகிறார்.
புதுக்கோட்டை,
கண்காணிப்பு அலுவலர்
நெல்லையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியின் கழிவறை கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினர். இந்த சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பள்ளிக்கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ள கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக சென்னை மாநில திட்ட இயக்கக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குனர் வாசு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை (திங்கட்கிழமை) புதுக்கோட்டைக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
100 கட்டிடங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 259 பள்ளிகளின் கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும் எனவும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 66 பள்ளிகளில் கட்டிடங்கள் பாதுகாப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 100 பள்ளிகளில் கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளன. இதில் பள்ளியின் வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் ஒரு பகுதி சேதம், ஆபத்தானவை, பயன்படுத்தப்பட முடியாதவை, பழமையான கட்டிடம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த கட்டிடங்கள் மட்டும் இடிக்கப்பட உள்ளன. இதில் 16 கட்டிடங்கள் பொதுப்பணித்துறையினர் மூலமும், 84 பள்ளி கட்டிடங்கள் ஊரக வளர்ச்சி துறை மூலமும் இடிக்கப்பட உள்ளன.
இயற்பியல் ஆய்வகம்
பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்படும் போது பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெறும் என முதன்மை கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி தெரிவித்தார். பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணி நாளை (திங்கட்கிழமை) முதல் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். புதுக்கோட்டை நகரப்பகுதியில் இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களில் பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் ஆய்வகம் கட்டிடம் இடம்பெற்றுள்ளது. அந்த கட்டிடம் சேதமடைந்து பயன்பாட்டிற்கு அற்ற முறையில் உள்ளது. இந்த நிலையில் நெல்லை சம்பவம் எதிரொலியாக சேதமடைந்த கட்டிடங்களின் அருகில் மாணவ-மாணவிகள் செல்லாமல் இருப்பதற்காக கயிறு வைத்து கட்டப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story