சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று தேரோட்டம் நடத்த அனுமதி


சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று தேரோட்டம் நடத்த அனுமதி
x
தினத்தந்தி 18 Dec 2021 6:37 PM GMT (Updated: 18 Dec 2021 6:37 PM GMT)

சிவனடியார்கள், பா.ஜ.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாளை(திங்கட்கிழமை) நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவிலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிதம்பரம், 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், நாளை (திங்கட்கிழமை) ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நடராஜர் கோவில் தேரோட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. மேலும் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்கள் தரிசனம் செய்யவும் தடைவிதித்தது. 
இந்த நிலையில் நேற்று மாலை கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கோட்டாட்சியர் ரவி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் மற்றும் தீட்சிதர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திலும் தேரோட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது.

சாலை மறியல்

இந்த நிலையில் தேரோட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி பா.ஜ.க., இந்து முன்னணியினர், ஆலய பாதுகாப்பு குழுவினர், சிவனடியார்கள், மற்றும் பக்தர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் சிதம்பரம் கீழ வீதியில் இரவு 7 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நடராஜர் கோவிலில் தேரோட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும், ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

தேரோட்டம் நடத்த அனுமதி

அப்போது கலெக்டர் பாலசுப்பிரமணியம் தேரோட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளதாகவும், அதனால்  கோவிலில் தேரோட்டம் நடத்தி கொள்ளவும், ஆருத்ரா தரிசன விழாவில்  குறைந்த அளவு பக்தர்கள் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தெரிவித்தார். இருப்பினும் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அதனை ஏற்ற சிவனடியார்கள், பா.ஜ.க.வினர் சுமார் 9.30 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story