தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
சாலை பணி தொடங்கியது
உண்ணாமலைக்கடை பேரூராட்சியில், கொடுங்குளத்தில் வலியகுளத்தின் கரையையொட்டி ஆயிரங்தெங்கு பகுதிக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை சீரமைப்பு பணிக்காக பெரிய பெரிய ஜல்லிகள் நிரப்பப்பட்டது. அதன்பின்பு பணியை தொடர்ந்து மேற்ெகாள்ளாமல் அப்படியே பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதனால், அந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் காங்கிரீட் தளம் போடும் பணி தொடங்கப்பட்டது. செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
நிவாரணம் வழங்க வேண்டும்
குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையில் ஊட்டுவாழ்மடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வெள்ளச்ேசதம் ஏற்பட்டது. இங்கு ஊட்டுவாழ்மடம் நடுத்தெரு மற்றும் வடக்கு தெருவிலும், கருப்புகோட்டை போன்ற பகுதிகளிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால் தெற்கு தெருவில் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு தெரு மக்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், வெள்ளத்தால் சேதமடைந்த தெருக்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தரபாபு, ஊட்டுவாழ்மடம் தெற்கு தெரு.
சாலையை சீரமைக்க வேண்டும்
நுள்ளிவிளை ஊராட்சியில் ஆற்றின்கரை வழியாக செல்லும் ராஜபாதை சாலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் பயணம் செய்கிறார்கள். தற்போது இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவிகுமார், மொட்டவிளை.
மரக்கிளையை அகற்ற வேண்டும்
ஆரல்வாய்மொழி வடக்கூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் சமையல் கூடத்தின் மேற்பகுதியில் ஒரு மரத்தின் கிளைகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால், சமையலறை வலுவிழந்து போகும் நிலையில் உள்ளது. எனவே மரத்தின் கிளைகளை அகற்ற சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழரசு, ஆரல்வாய்மொழி.
சிற்ப கலை பயிற்சி மையம் அமைக்கப்படுமா?
குமரி மாவட்டத்தில் மைலாடி கிராமம் சிற்ப கலை தொழில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள ஏராளமானோர் சிலைகளை செதுக்கும் தொழில் செய்து வருகிறார்கள். இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு தெய்வ சிலைகள் உள்பட பல்வேறு தரப்பட்ட சிலைகள் அனுப்பி வைக்கப்படுகிறது. சிற்ப கலையை ஊக்குவிக்கும் வகையில் மைலாடியில் அரசு சார்பில் சிற்ப கலை பயிற்சி மையம் அமைக்க வேண்டும். இதன்மூலம் சிற்பக்கலை வளர்வதோடு, வேலை வாய்ப்பு பெரும். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
-அனந்தநாராயணன், மருங்கூர்.
இடிந்த பள்ளி சுற்றுச்சுவர்
தடிக்காரன்கோணம் பஞ்சாயத்தில் வாழையத்துவயல் பகுதியில் ஆதிதிராவிடர் பள்ளி உள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வரும் கழிவறை மீது பள்ளியின் சுவர் இடிந்து சாய்ந்து கிடக்கிறது. மாணவர்கள் நடமாடும் பகுதியில் இடிந்து நிற்கும் சுற்றுச்சுவரால் பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இடிந்த சுவரை அகற்ற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வே. மணிகண்டன், தடிக்காரன்கோணம்.
ஆபத்தான மின்கம்பம்
நாகர்கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன்கோவில் தெருவில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் காணப்படுகிறார்கள். எனவே, ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வே.சிவக்குமார், நாகர்கோவில்.
Related Tags :
Next Story