தனியார் பண்ணை குட்டைகளில் செத்து மிதக்கும் மீன்கள்-விஷம் கலக்கப்பட்டதா? போலீசார் விசாரணை


தனியார் பண்ணை குட்டைகளில் செத்து மிதக்கும் மீன்கள்-விஷம் கலக்கப்பட்டதா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 Dec 2021 12:13 AM IST (Updated: 19 Dec 2021 12:13 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி அருகே தனியார் பண்ணை குட்டைகளில் வளர்க்கப்பட்ட மீன்கள் செத்து மிதந்தன. குட்டையில் விஷம் கலக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கறம்பக்குடி, 
பண்ணை குட்டைகள்
கறம்பக்குடி அருகே பாப்பாபட்டி ஊராட்சி அருத்தோடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பீர்முகமது (வயது 41). இவருக்கு சொந்தமான இடத்தில் பண்ணை குட்டைகளை அமைத்து மீன்களை வளர்த்து வருகிறார். ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் மீன்குஞ்சுகளை குட்டையில் விட்டு வளர்த்து ஜனவரி மாதத்தில் புத்தாண்டு, பொங்கலுக்கு மீன்களை பிடித்து விற்பனை செய்வது வழக்கம். தற்போது மீன்கள் நன்கு வளர்ந்து விற்பனைக்கு தயாராக இருந்தன.
விஷம் கலக்கப்பட்டதா?
நேற்று காலை பீர்முகமது வழக்கம் போல் மீன் குட்டைக்கு சென்றார். அங்கு குட்டை தண்ணீரில் ஆங்காங்கே மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மற்றொரு குட்டைக்கு சென்று பார்த்தபோது அங்கும் மீன்கள் செத்து மிதந்தன. இதில், குட்டையில் இருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்கள் இறந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பீர்முகமது கொடுத்த புகாரின் பேரில் ரெகுநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், குட்டை நீரில் மர்ம ஆசாமிகள் ஏதேனும் விஷம் கலந்தனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செத்து மிதந்த மீன்கள் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள மீன்வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
பண்ணை குட்டை தண்ணீரை கால்நடைகள் பயன்படுத்தாமல் இருக்க அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story